தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகின்றனர். அதில் பெரம்பலூர் டவுன், கை.களத்தூர், செட்டிகுளம், காரை அரசு மருத்துவமனை, வேப்பூர் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் 108 ஆம்புலன்சுகள் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இரவு நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரத்தில் கிராமப்புறங்களில் 108 ஆம்புலன்சு சேவை தாமதமாக கிடைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளுக்கு டிரைவர்-மருத்துவ உதவியாளர் நியமித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கம்பி வேலி அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு ஆழம் அதிகமானதால் அரசால் மூடப்பட்ட தனியார் கல்குவாரியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 300 அடி ஆழமான இந்த கல்குவாரியில் தண்ணீர் அருந்த வரும் கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழந்து விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாட்டார்மங்கலம்.

நிழற்குடை அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அசூர் பிரிவு சாலையை விரிவு படுத்தியபோது சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போது பஸ்சிற்காக பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அசூர்.

பயத்தை ஏற்படுத்தும் தெருநாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க வருவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வாலிகண்டபுரம்.

மதகு, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெரணி பெரிய ஏரி உட்பட ஒன்றியம் முழுவதும் சில ஏரி, குளங்களில் மதகுகள் பழுதடைந்தடைந்தும், அதன் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும் காணப்படுகின்றன. எனவே எதிர் பெய்யக்கூடிய மழைக்கு முன் அந்த ஏரி, குளங்களில் மதகுகளை சீரமைத்தும், வாய்க்கால்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

விவசாயிகள், தெரணி.


Next Story