'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திசையன்விளை- நவ்வலடி சாலையில் கரைசுத்து புதூர் பஞ்சாயத்து ராஜம்மாள்புரம் அருகே ரோட்டோரம் மரக்கிளை ஒன்று முறிந்து விழும் நிலையில் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மரக்கிளை தற்போது வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் ெதரிவித்துள்ளார்.

குவித்து வைக்கப்படும் சாக்கடை கழிவுகள்

நெல்லை கொக்கிரகுளம், குறிச்சி, குலவணிகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்பு உள்ள வாறுகால்களில் மாதக்கணக்கில் தான் சாக்கடை கழிவுகள் அள்ளப்படுகிறது. அவ்வாறு அள்ளி தெருவில் குவித்து வைக்கப்படும் கழிவுகளும் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் அந்த சாக்கடை கழிவுகள் வெயிலில் காய்ந்து மீண்டும் ஓடையிலே விழக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, தெருவில் அள்ளி வைக்கப்படும் சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகுமார், கொக்கிரகுளம்.

பேவர் பிளாக் சாலை

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தாழ்வான பகுதி என்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் அதிகமாக தேங்குகிறது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் மக்கள் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அங்கு பேவர் பிளாக் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

குருநாதன், மூலைக்கரைப்பட்டி.

தெருவிளக்கு எரியவில்லை

திசையன்விளை சுடர்நகர் தெருவில் அமைந்துள்ள மின்விளக்கு கடந்த 15 நாட்களாக எரியவில்லை. மேலும், இரும்பு கம்பம் அமைக்கப்படாமல், மரத்தால் ஆன கம்பில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கற்பகசுஜித், திசையன்விளை.

இடிந்து கிடக்கும் கால்வாய் பாலம்

நாங்குநேரி தாலுகா கரந்தாநேரி பஞ்சாயத்து பாணான்குளம்- சூரபுரம் சாலையில் மணிமுத்தாறு கால்வாய் பாலம் இடிந்து சுமார் 2 வாரங்களாக அப்படியே கிடக்கிறது. எனவே, பாலத்தை சரிசெய்து தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சரவணன், பாணான்குளம்.

குடிநீர் வசதி

தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சமீபகாலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நல்லியில் தண்ணீர் வராமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சீராக மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர் கணேஷ், தூத்துக்குடி.

தெருவிளக்கு எரியுமா?

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவில் மின்விளக்குகள் சரிவர எரியாமல் இருளாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். அங்கு சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன. ஆகையால் மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அழகப்பன், தூத்துக்குடி.

பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்கூடம்

கோவில்பட்டி- கடலையூர் சாலையில் பூரணி அம்மாள் காலனிக்கும், அரசு உணவு பாதுகாப்பு குடோனுக்கும் இடையே அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைக்கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும். மேலும், அதன் அருகே உபயோகமற்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள அடிபம்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், கோவில்பட்டி.

குரங்குகள் தொல்லை

கழுகுமலை பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டமாக வந்து வீடுகளில் உள்ள தின்பண்டங்கள் மற்றும் பொருட்களை தூக்கிச் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

நாகராஜன், கழுகுமலை.

வேலி மீண்டும் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் 4 மின்மாற்றிகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு புதிதாக சிமெண்டு ரோடு அமைக்கப்பட்டது. அப்போது மின்மாற்றிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டு விட்டது. பாதசாரிகள் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், அகற்றப்பட்ட வேலிகளை மீண்டும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கருப்பையா, தூத்துக்குடி.

சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

ஆலங்குளம் மெயின் ரோட்டில் தென்காசி- நெல்லை சாலை விரிவாக்க பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வெட்டும் பெருமாள், ஆலங்குளம்.

பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் கடந்த 3 வருடங்களாக பூட்டியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரமேஷ், கடையம்.

சிமெண்டு ரோடு அமைக்கப்படுமா?

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வடக்கு பகுதியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லை. எனவே, இங்கு சிமெண்டு ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கிருஷ்ண ராஜ், பாவூர்சத்திரம்.

ஓடையை தூர்வார வேண்டும்

சுரண்டை அருகே குலையநேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டைகுளம் கிராமத்தில் ரெட்டைகுளத்தின் கீழ் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்திற்கு நீர் வரத்து, காட்டு கருப்பசாமி கோவில் ஓடை மூலம் வந்தடைகிறது. குளத்தின் அருகே உள்ள இந்த ஓடை மிகவும் தூர்ந்து கிடக்கிறது. தற்போது குளத்து மண் அள்ளும் வேலை நடக்கும் வேளையில் இந்த ஓடையையும் தூர்வாரினால் மழைக்காலத்தில் கீழ் குளத்திற்கு தண்ணீர் வர வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரிகிருஷ்ணன், சுரண்டை.

சேறும் சகதியுமான சாலை

கடையம்- திருமலையப்பபுரம் மெயின் ரோட்டில் பள்ளங்களில் செம்மண் போட்டு நிரப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் அங்கு தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்ணன், கேளையாபிள்ளையூர்.


Next Story