'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலை உதவி கலெக்டர் அலுவலகம் முதல் கால்நடை மருத்துவமனை வரை கம்பத்தில் மின்விளக்கு எரியாமல் இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

திறந்து கிடக்கும் மின்இணைப்பு பெட்டி

நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து மகாராஜபுரம் ஜங்சன் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி திறந்தநிலையில் உள்ளது. அதை மூடி வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை

களக்காடு ஒன்றியம் கீழகாடுவெட்டி ஊராட்சி அப்பர்குளம் முதல் காடுவெட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஆகையால் சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

-கருப்பசாமி பாண்டியன், அப்பர்குளம்.

* களக்காடு மெயின் ரோட்டில் பத்மநேரியில் இருந்து சேரன்மாதேவி செல்லும் சாலையில், பத்மநேரி குளத்தின் மறுகால் பாயும் கால்வாய் தென்புறம் நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், பத்மநேரி.

குளமாக மாறிய தெரு

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருணாசலபுரம் சி.காலனியில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. பள்ளம், சேறு நிறைந்த இந்த பகுதியில் தான் போக்குவரத்து நடைபெறுகிறது. சிறுவர்கள், முதியவர்கள் நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. இதை சீரமைப்பார்களா?

-ஆரோன் தனசிங், பாளையங்கோட்டை.

கழிவுகளால் சுகாதாரக்கேடு

மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பஸ்நிறுத்தத்தில் கழிவுநீர் ஓடை தற்காலிகமாக தூர்வாரப்பட்டு கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே உடனே இதை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-அகமது சகி, மேலப்பாளையம்.

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கந்தபுரம் மேலத்தெருவில் உடையார் சுவாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கீழ்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை சிமெண்டு பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது. வேகமாக காற்று வீசும்போது மின்கம்பம் அங்கும், இங்கும் ஆடுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-ஸ்ரீராம், உடன்குடி.

சுகாதாரமற்ற பொது கழிவறை

கோவில்பட்டி பழைய பஸ்நிலையத்தில் பொது கழிவறை சுத்தப்படுத்தப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதை சுத்தப்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும்.

-முருகன், கோவில்பட்டி.

மழைநீர் வடிகாலில் விரிசல்

திருச்செந்தூர் முதல் செங்கோட்டை வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு மேல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மேல்தளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பகுதியில் அதிக அளவு விரிசல் உள்ளது. வாகனங்கள் செல்லும்போது வடிகால் மேல்தளம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே அதிகாரிகள் இதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-செல்வமுருகன், திருச்செந்தூர்.

கால்நடைகளால் இடையூறு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பகுதியில் கால்நடைகள் சுற்றி வருவதால் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.

வாறுகால் பணி

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்பாநாயகம்நகர் 2-வது தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த தெருவில் புதிதாக வாறுகால் அமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன் சாைலயோரம் நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், உள்ளே செல்வதற்கும் சிரமப்பட்டு பள்ளத்தை தாண்டி செல்கின்றனர். மேலும் பள்ளத்தில் கழிவுநீரும் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிடப்பில் கிடக்கும் வாறுகால் பணியை தொடங்கி முடிக்க வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி.

சாலையை சீரமைக்க வேண்டும்

தென்காசி அருகே குணராமநல்லூர் பகுதியில் மத்தளம்பாறையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதியழகன், மத்தளம்பாறை.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

கடையம் அருகே ரவணசமுத்திரம் ரெயில்வே கேட் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீராக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

சங்கரன்கோவில் தொகுதி கீழநீலிதநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தவன கிணறு அருகில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கிணற்றை சுற்றிலும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர்.

வேகத்தடை வேண்டும்

ஆலங்குளம் தாலுகா காவலாக்குறிச்சி அருகே மருதுபுரம்புதூர் தெற்கே விலக்கு அருகில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்குள்ள மெயின்ரோட்டில் இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகையா பாண்டியன், காவலாக்குறிச்சி.


Next Story