'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் ஊராட்சி செம்பிகுளம் கிராமத்தில் சாலையோரத்தில் மின்மாற்றி அருகே உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக வாசகர் பொன்ராஜ் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேறும் சகதியுமான சாலை

பாளையங்கோட்டை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4-வது வார்டு அரசு புது காலனியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழையில் சேறும், சகதியுமாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை உடனடியாக சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியப்ப பாண்டியன், ராமையன்பட்டி.

பழுதடைந்த அடிபம்பு

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கல்லத்தி தெற்கு தெருவில் உள்ள அடிபம்பு பழுதடைந்து சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகியும் சரிசெய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது. எனவே இதனை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மணிகண்டன், மூலைக்கரைப்பட்டி.

குடிநீர் குழாயில் உடைப்பு

நெல்லை கொக்கிரகுளம் நேதாஜி ரோட்டில் கோழிப்பண்ணை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தில் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யப்பன், கொக்கிரகுளம்.

மண்ணில் புதைந்த அடிபம்பு

மேலப்பாளையம் டி.நகர் பகுதியில் ஆயிஷா பள்ளிவாசல் அருகே குடிநீர் அடிபம்பு ஒன்று உள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த அடிபம்பு காலப்போக்கில் மண்ணில் புதைந்து இன்று மக்கள் நடந்து செல்லும் தெருவில் இடையூறாக உள்ளது. எனவே பயன்பாடற்ற இந்த அடிபம்பை அகற்றுவதற்கு மநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல் ஜப்பார், மேலப்பாளையம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருப்பதாக வாசகர் திருப்பதி என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பன்றிகள் தொல்லை

தூத்துக்குடி கே.டி.சி.நகர் குடியிருப்பு பகுதியில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே அசுத்தம் செய்வதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாலும் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மஞ்சு, தூத்துக்குடி.

புதிய நிழற்கூடம் கட்டப்படுமா?

சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் கிராமம் பொத்தகாலன்விளை- மணிநகர் சாலையில் நரையன்குடியிருப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைந்துள்ளது. அதன் உள்ளே மேல்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அங்கு பயணிகள் நிற்பதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே அதனை அகற்றிவிட்டு புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேசு கோபின், பிரகாசபுரம்.

பழுதடைந்த நன்மைக்கூடம்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் அமைந்துள்ள மையவாடியில் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மேலும் அங்குள்ள நன்மைக்கூடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. சுவரில் ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள நன்மைக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராம், திரேஸ்புரம்.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு செல்லும் சாலையில் காமராஜ் நகர் முகப்பு பகுதியில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 25-வது வார்டு பூங்கா அருகே சேர்ந்தமரம் சாலையில் உள்ள மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியின் பிரதான நுழைவு வாயில் முன்பு கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதற்காக ஓடை திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் திறந்தநிலையில் இருந்ததால் கழிவுநீர் ஓடையில் மாணவர்கள் தவறி விழும் அபாயம் இருப்பதாக கடையநல்லூரை சேர்ந்த வாசகர் சகிலா பானு என்பவர், "தினத்தந்தி" புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக கழிவுநீர் ஓடையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த "தினத்தந்தி"க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

நாய்கள் தொல்லை

புளியங்குடி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வல்லவ விநாயகர் கோவில் தெரு, சிந்தாமணி தெரு, பஸ்நிலையம் போன்ற பகுதிகளிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

மோசமான சாலை

பாவூர்சத்திரம் அருேக திரவியநகரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து முதலியார்பட்டி வரை குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் குண்டும் குழியுமாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், கேளையாபிள்ளையூர்.

தேசிய ஊரகப்பணி

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரகத்திட்ட 100 நாள் பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே தேசிய ஊரக திட்டப்பணிகள் நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கணேசன், கீழக்கலங்கல்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் அருகே உள்ள குடிநீர் அடிபம்பில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்துச் செல்லும் அவலநிலையும் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வாறுகாலில் அடைப்புகளை அகற்றி தொடர்ந்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கீழக்கடையம்.


Next Story