'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு, வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மின்விளக்கு எரியவில்லை

நெல்லை மாவட்டம் அம்பை சந்தை பஜாரில் வண்டிமறித்தம்மன் கோவில் எதிர்ப்புறம் உள்ள மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சின்னத்தம்பி, அம்பை.

பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு ஊராட்சி எல்லையில் நெல்லை- கடையம், நெல்லை- சேரன்மாதேவி சாலை இணைப்பு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அதில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அகற்றப்பட்டு விட்டது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராமுகுட்டி, சங்கன்திரடு.

குண்டும் குழியுமான சாலை

மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தூர் பாண்டியன், மூலைக்கரைப்பட்டி.

மண்ணில் புதைந்த அடிபம்பு

நெல்லை மேலப்பாளையம் ராவுத்தர் வடக்கு கீழத்தெருவில் 3 அடிபம்புகள் கடந்த 5 ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. அதில் ஒரு அடிபம்பு மண்ணில் புதைந்தவாறு காட்சி அளிக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

காதர்மீரான், மேலப்பாளையம்.

குழப்பத்தை ஏற்படுத்தும் அறிவிப்பு பலகை

கன்னியாகுமரி- தூத்துக்குடி கடற்கரை சாலையில் ராதாபுரம் தாலுகா நம்பி ஆற்றுப்பாலத்தின் மேற்கு பகுதியில் வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. ஆனால் சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

மணல்திட்டு அகற்றப்படுமா?

திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் செல்லும் பாதையில் ஓடைப்பாலத்தின் கீழ்ப்புறம் மணல் திட்டு உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது. எனவே மணல் திட்டை அகற்றி தண்ணீர் சீராக செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெயக்குமார், திருச்செந்தூர்.

உரம் தட்டுப்பாடு

ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் விவசாயத்துக்கு தேவையான உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.

முருகன், வெள்ளூர்.

வாறுகாலில் அடைப்பு

எட்டயபுரம் பேரூராட்சி 11-வது வார்டு பழைய போலீஸ் லைன் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாறுகாலில் அடைப்புகளை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மாரி கணேஷ், எட்டயபுரம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாயர்புரம் பஜாரில் இருந்து வாகைகுளம் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கணேசன், சாயர்புரம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர், அங்குள்ள மூன்று மதகு பகுதியில் இருந்து ஊத்துமலை குளத்துக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் புதர்கள் மண்டி கிடப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக, 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக மூன்று மதகு பகுதியில் இருந்து மேலக்கலங்கல் பாலம் வரைக்கும் ஓடை தூர்வாரப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சிதிலமடைந்த மருத்துவமனை கட்டிடம்

ஆய்க்குடி அரசு மருத்துவமனை பிரதான கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். தற்போது இந்த கட்டிடம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மருந்து மாத்திரைகள் வைக்கும் அறையில் மழைக்காலத்தில் தண்ணீ்ர் ஒழுகுகிறது. எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சுப்பிரமணியன், ஆய்க்குடி.

பழைய கட்டணம் வசூலிக்கப்படுமா?

நெல்லை- செங்கோட்டை ரெயில், பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டபோது கீழ ஆம்பூரில் இருந்து நெல்லைக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பழைய கட்டணத்தை வசூலிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

கரடுமுரடான சாலை

கடையம் பஸ்நிலையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் சாலை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால் விளைநிலங்களுக்கு விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள், வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்ஜத், முதலியார்பட்டி.

சாலையின் நடுவே மின்கம்பம்

கடையம் யூனியன் வீராசமுத்திரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் சாலையில் வாகைகுளம் பகுதியில் சாலை ஆபத்தான வளைவாக உள்ளது. அந்த வளைவு பகுதியில் மின்கம்பம் ஒன்று சாலையின் நடுவே அமைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.


Next Story