'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் திசையன்விளை- நவ்வலடி ரோடு ராமன்குடியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை அடைத்து சரி செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளின் கூடாரமாக மாறிய அங்கன்வாடி மையம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சி 15-வது வார்டு மேல ஏர்மாள்புரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால், மற்றொரு இடத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. இந்த நிலையில் பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பற்று கால்நடைகளின் கூடாரமாக மாறி விட்டது. எனவே, அதனை இடித்து அகற்றி விட்டு, அங்கு மக்களின் பயன்பாட்டுக்கு சமுதாய நலக்கூடம் கட்டி தருவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-செல்வமணி, மேல ஏர்மாள்புரம்.
புதிய பாலம் அமைக்க வேண்டும்
பாப்பாக்குடி யூனியன் பழவூர் பஞ்சாயத்து 6-வது வார்டு தெற்கூர் மெயின் ரோட்டில் உள்ள ஓடை பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்ததால், அதன் ஓரத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றன. மற்ற வாகனங்களில் அவசர காலங்களில் கூட ஊருக்குள் செல்ல முடியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.
-சிவபாலன், தெற்கூர்.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் கிழக்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-மணிகண்டன், கடம்பன்குளம்.
பஸ் வசதி தேவை
மூலைக்கரைப்பட்டி அருகே ஆழ்வாநேரி, மாயநேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். எனவே, மாயநேரி- நெல்லை சந்திப்பு இடையே காலையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை மாணவர்களின் வசதிக்காக காலை 7.30 மணிக்கு மாயநேரியில் இருந்து புறப்பட்டு செல்லுமாறு இயக்க வேண்டும். அதேபோன்று மாலை 5 மணியளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மாயநேரிக்கு செல்லும் வகையிலும் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-அருள் சாலமோன், ஆழ்வாநேரி
மின்கம்பத்தை மறைத்த மரக்கிளைகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி ரோடு காந்தாரி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குறுகலான சாலையோரம் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள மரத்தின் கிளைகளானது மின்கம்பத்தை மறைத்தவாறு சாலை வரையிலும் நீண்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்துக்கு புதிலாக புதிய மின்கம்பம் அமைக்கவும், சாலையை ஆக்கிரமித்த மரக்கிளைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
சாலையில் மண்திட்டுகள்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்ட பேவர்பிளாக் சாலை சற்று தாழ்வாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் மண்திட்டுகளாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சாலையை சமமாக அமைக்கவும், மண்திட்டுகளை அகற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஜெயக்குமார், திருச்செந்தூர்.
சுகாதாரக்கேடு
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை எதிரில் உள்ள வடிகால் ஓடையில் சிலர் குப்பைகள், கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி, கழிவுநீர் வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-அப்துல்காதர், காயல்பட்டினம்.
சேதமடைந்த துணை சுகாதார நிலையம்
சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். எனவே, சேதமடைந்த துணை சுகாதார நிலையத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ஆனந்தராஜ், செந்தியம்பலம்.
நிறுத்தப்பட்ட பஸ்சால் பொதுமக்கள் அவதி
நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.15 மணிக்கு சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. மேலும் அந்த பஸ் பகலிலும் இயக்கப்படாததால், பஸ்சுக்காக காத்து கிடந்து பொதுமக்கள் ஏமாந்து செல்கின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-அன்றோ ஜெஸ்வந்த், சாத்தான்குளம்.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி- ராயகிரி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் (தடம் எண்:- 40சி) சுப்பிரமணியபுரத்துக்கு வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று வாசுதேவநல்லூர்- தென்காசி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சிலும் (தடம் எண்:- 44 பி) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்த வழக்கமான கட்டணத்தையே பஸ்களில் வசூலிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிேறன்.
-சீமான், வெள்ளானைக்கோட்டை.
சேதமடைந்த மின்கம்பம்
பாவூர்சத்திரம் அருகே சிவநாடானூர் பஞ்சாயத்து பூசையத்தாழ்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் உச்சியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-பால்ராஜ், தென்காசி.
பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடைகள் தேவை
கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் உள்ள வேகத்தடைகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று அகற்றினர். இதையடுத்து அந்த வழியாக அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளிக்கூடம் அருகில் மீண்டும் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
ஆபத்தான பயணம்
பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் வழியாக அகஸ்தியர்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். எனவே, அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-அம்ஜத், முதலியார்பட்டி.
நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தெற்குேமட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தடம்:- 6டி), சங்கரன்கோவிலில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட பஸ் (வழித்தடம்:- 205), புளியங்குடியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக அம்பைக்கு இயக்கப்பட்ட பஸ் ஆகியவை கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடந்து பொதுமக்கள் ஏமாந்து செல்கின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-மாரியப்பன், சுந்தரபாண்டியபுரம்.