'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதியில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக, திருச்செந்தூரை சேர்ந்த மோகனசுந்தரம் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி கான்கிரீட் போட்டு சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.
சேதமடைந்து கிடக்கும் இருக்கைகள்
நெல்லை மாவட்டம் திசையன்விளை பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் பயணிகள் கால்கடுக்க காத்து நின்று பஸ் ஏறி செல்லும் அவல நிலை உள்ளது. பயணிகள் நலன் கருதி, அந்த இருக்கைகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சுரேஷ், திசையன்விளை.
வடிகால் வசதி வேண்டும்
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பஞ்சாயத்து சன்மதி நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி தாழ்வான பகுதி என்பதால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் அமைப்பதுடன் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்துதர வேண்டுகிறேன்.
- ரவிச்சந்திரன், சன்மதிநகர்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு மார்க்கமாக, அதாவது கங்கனான்குளம், பத்மநேரி, களக்காடு, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல மாலை நேரத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. மேலும் ஒருசில பஸ்கள் சரியான நேரத்துக்கும் வருவது இல்லை. இதனால் அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதல் பஸ்கள் இயக்கவும், சரியான நேரத்துக்கு பஸ்கள் வந்து செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- முத்துராமன், கங்கனான்குளம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
நெல்லை என்.ஜி.ஓ. 'பி' காலனி பிள்ளையார் கோவில் முன்பு 15-வது தெரு பகுதியில் குப்பைகள், தென்னை ஓலைகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அங்கு குப்பைத்தொட்டி வைத்து முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆறுமுகம், என்.ஜி.ஓ. 'பி' காலனி.
வேகத்தடை அவசியம்
அம்பை மெயின் ரோட்டில் தெற்கு பக்கம் அரசு மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், தாலுகா அலுவலகம் ஆகியவையும், வடக்கு பக்கம் வங்கி, ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவையும் உள்ளன. அந்த சாலையில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், ஜெராக்ஸ் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு முதியவர்கள், ஊனமுற்றோர், சிறுவர்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகையால் அங்கு வேகத்தடை அமைத்தால் பெரிதும் உதவியாக இருக்கும்.
- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் முட்செடிகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து மணப்பாடு செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. அவை அந்த வழியாக வாகனங்களில் வருபவர்களை பதம் பார்க்கின்றன. தற்போது குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே, அதற்குள் முட்செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- கலீல் ரகுமான், உடன்குடி.
மருத்துவக்கழிவுகளை எரிப்பதால் மக்கள் அவதி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் காலனி அருகே மருத்துவக்கழிவுகளை சிலர் முறையாக அப்புறப்படுத்தாமல் குப்பைகளுடன் சேர்த்து தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆகையால் மருத்துவ கழிவுகளை எரிக்காமல், உரிய முறையில் அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மகேஷ், தூத்துக்குடி.
போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வாகனம் மோதியதில் இடிந்து சேதம் அடைந்தது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவற்கு முன்பு அந்த சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.
குடிநீர் பிரச்சினை
கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிபட்டி கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது இல்லை. இதனால் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது தண்ணீருடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இதில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- விநாயகம், கூசாலிபட்டி.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
கடையம யூனியன் புங்கம்பட்டி சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதம் அடைந்து உள்ளதாகவும், அதை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்றும் கடையத்தை சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக பழைய மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.
தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அங்கு சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் தடுப்பு சுவர் இல்லாததால் பெரிய பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். அங்கு தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கனியமுதன், செங்கோட்டை.
பயணிகள் நிழற்கூடம் வேண்டும்
சங்கரன்கோவில் பிரதான பஸ் நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நெல்லை, ராஜபாளையம், தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து சங்கரன்கோவில் வரும் பஸ்கள், பழைய பஸ் நிலையம் எதிர்ப்புறம் உள்ள மெயின் ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, புதிய பஸ் நிலையம் நோக்கி செல்கின்றன. அங்கு பயணிகள் சாலையோரம் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு தற்காலிகமாக பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- மாணிக்கவாசகம், நெல்லை.
ஆபத்தான பயணம்
செங்கோட்டையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் வரும் மாணவர்கள், பஸ்சுக்குள் நிற்பதற்கு போதிய இடம் இருந்தாலும் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, புளியரை, தெற்கு மேடு, கடையநல்லூர், சுரண்டை செல்லும் பஸ்களில் இந்த நிலை உள்ளது. எனவே மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணிப்பதை தடுப்பதுடன், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
சாலை சீரமைக்கப்படுமா?
சிவகிரி தாலுகா வடுகப்பட்டி முதல் இனாம் கோவில்பட்டி வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சுந்தரகுமார், இனாம் கோவில்பட்டி.