தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழஉசேன்நகரம் கிராமத்தில் நாயகி அம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் சீமைகருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாமல் வரண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிவேல் , கீழஉசேன் நகரம்.
சுகாதார வளாகம் சுத்தம் செய்யப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பாடாலூர் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதனை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பாடலூர்.
மின்விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு கீழ் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகளின் நலன்கள் கருதி பாலத்தினுள் 2 மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக 2 மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்குணம்.
தொடர் திருட்டை தடுக்க வேண்டும்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மீண்டும் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நகர்ப்பகுதியில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்
பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் சில சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அதில் சிறுவர்-சிறுமிகள் விளையாட முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி, அதற்கு பதிலாக புதிதாக விளையாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்