தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

காற்று மாசு அபாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வந்தலை கூடலூர் கிராமத்தில் இருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் புள்ளம்பாடி அன்னாள் பொதுகல்லறை அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காற்று மாசடைகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு மூச்சு திணரல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஒன்றியம் எளமணம் ஊராட்சியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் மூடி பகுதி முற்றிலும் சேதம் அடைந்து தொட்டி திறந்து நிலையில் காணப்படுகிறது. இதனால் பறவைகள் எச்சம் மற்றும் இறந்த பறவைகள் குடிநீர் தொட்டிக்குள் கிடக்கின்றன. மேலும் தொட்டி சுத்தம் செய்யப்படாத நிலையில் காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் சுகதாரமற்ற குடிநீரை பருகி வருகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வெங்கடாசலபுரத்திலிருந்து புடலாத்தி செல்லும் குறுக்கு சாலையில், சாலையின் மையப்பகுதியில் 2 அடி அகலத்திற்கு குழி ஏற்பட்டு மரண குழியாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழியில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா உப்பிலியபுரம் பேரூராட்சி ஜீவன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள சிதிலமடைந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை சிதிலமடைந்த மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்புகளை புதிய மின்கம்பத்திற்கு மாற்றாமல் உள்ளனர். இதனால் புதிய மின்கம்பம் நட்டும் பயன் இல்லாமல் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக மின் இணைப்பு கொடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி கிராப்பட்டி ரெயில்வே மேம்பாலத்தின் இறக்கப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததை தொடர்ந்து, விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் சாலையில் பேரிக்காடு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகை ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பேரிகார்டை சிலர் சாலையோரம் இழுத்து போட்டுவிட்டு அதன் அருகே தள்ளுவண்டி கடை அமைத்துள்ளதால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பேரிகார்டை மீண்டும் சாலையில் வைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மூடி இல்லாத பாதாள சாக்கடை

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், சங்கிலியாண்டபுரம் சுப்பையா தெரு அஸ்வின் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி முற்றிலும் சேதமடைந்து பல்லமாக காணப்படுகிறது. இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் இதில் தவறி விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

திருச்சி கலைஞர் சாலை தொழிற்பேட்டை துவாக்குடி தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களின் தொல்லை இப்பகுதியில் அதிகம் காணப்படுவதினால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story