தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விருதுநகர்,
மண் திருட்டு
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பூஞ்சுத்தி கிராமத்தில் மேனியேந்தல் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை இப்பகுதி பொதுமக்கள் பலவழிகளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கண்மாய் மண் சிலரால் அனுமதியின்றி தினமும் திருடப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த கண்மாயானது பள்ளமாகி வளங்களானது குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்.
பாலமுருகன், மேலூர்.
செய்தி எதிரொலி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நரிப்பையூர் பஸ் நிலையம் பின்பு சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் எலும்புக்கூடாக மின்கம்பம் இருந்தது. இந்த மின்கம்பத்்தால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி அப்பகுதியில் புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ெஜயகுமார், நரிப்பையூர்.
அதிக கட்டணம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பஸ்களில் அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக ெபாதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காரைக்குடி-தேவகோட்டை வழிதடத்தில் அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.10-ல் இருந்து கூடுதலாக ரூ.3 டிக்கெட் கட்டணமாக வாங்குகிறார்கள். இதனால் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த கூடுதல் கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், தேவகோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் பஞ்சாயத்து மீனம்பட்டி வடக்கு தெருவில் உள்ள சாலைகளின் ஓரங்களில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.
செல்வம், சிவகாசி.
குடிநீர் குழாய் இணைப்பு தேவை
மதுரை மாவட்டம் குடிப்பட்டி ஊராட்சி அனுப்பபட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பல வீடுகளில் குடிநீர் குழாய் இணைக்கப்படவில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுகுடிநீர் குழாயிலும் குறைந்த அளவிலேயே குடிநீரானது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.
விக்னேஷ், பேரையூர்.
மின்மோட்டார் பழுது
விருதுநகர் மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் ஆம்பக்குடி பஞ்சாயத்து பெத்தானேந்தல் புக்குடி கிராமத்தில் எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கான குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையத்தின் மின்மோட்டாரானது பழுதடைந்து பலநாட்கள் ஆகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் பழுதடைந்த மின்மோட்டரை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியன், சாக்கோட்டை.
தார்ச்சாலை வேண்டும்
மதுரை மாவட்டம் 93-வது வார்டு வீரமுடையான் முத்துப்பட்டி 4-வது ெதருச்சாலையானது மண்ரோடாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் சிறு, சிறு விபத்துகள் இந்த சாலையில் நிகழ்ந்து வருகிறது. அவசரத்தேவைக்கான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் இந்த சாலையில் வர சிரமப்படுகிறது. எனவே இந்த தெருவின் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசன், முத்துப்பட்டி.
செயல்படாத கண்காணிப்பு கேமரா
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில் கோவில் அக்னி தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதி கிடையாது. மேலும் பெண்களுக்கான கழிப்பிடம் இல்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி இங்கு வரும் பக்தர்களின் பொருட்களும் சிலரால் திருடப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குவரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து, செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாரிமுத்து, ராமேசுவரம்.
குறைந்த மின்அழுத்தம்
சிவகங்கை மாவட்டம் கொத்தங்குளம் அருகே மார்நாடு பாலம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. மேலும் குறைந்த மின்அழுத்தத்தால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நிலவும் குறைந்த அழுத்த மின்சாரத்தை சரிசெய்ய வேண்டும்.
பாண்டிதுரை, கொத்தங்குளம்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்களும், கார், ஆட்டோ ஆகிய வாகனங்களும் அதிக அளவில் அனுமதி இல்லாமல் நிறுத்தப்படுகிறது. இந்த வழிதடத்தில் இயக்கப்படும் புறநகர் பஸ்கள் போக்குவரத்து நெரிசலால் தடுமாறுகிறது. நிறுத்தப்பட்ட வாகனங்களால் பஸ்கள் தாமதமாக செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், ஆரப்பாளையம்.