'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்விளக்கு வேண்டும்
மதுரை வைகை வடகரை ஆற்றின் ஓரச்சாலையை விரிவாக்கம் செய்தனர். அச்சமயம் ராமராயர் மண்டபம்-ஓபுளா படித்துறை பாலம் சாலைப்பகுதியில் இருந்த மின்விளக்குகளை அகற்றினர். பின்னர் சாலை விரிவாக்கப்பணி முடிந்தும் அகற்றப்பட்ட மின்விளக்குகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் சிவசண்முகம் சாலையிலிருந்து கரையோர விரிவாக்க சாலையில் வாகனங்களை இயக்கும் போது போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அகற்றிய மின்விளக்குகளை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.
விபத்து அபாயம்
மதுரை ஜவகர்புரத்திலிருந்து ரிசர்வ்லைன் வரையிலான புதூர் வண்டி பாதை ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்வதற்கு வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகனஓட்டிகள் சாலைகளி்ன் குழிகளில் தடுமாறி கீேழவிழுகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனா, ஆத்திகுளம்.
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகில் அப்பகுதி நகர்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பிரதான குழாய் உள்ளது. இந்த குழாய் மூலமாக வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரதான குழாயானது கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சேதமடைந்தது. இதனால் இந்த குழாயிலிருந்து குடிநீரானது அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியின் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. எனவே அதிகாாிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
பிரபாகரன், மதுரை.
ரேஷன்கடை வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகா் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடை இல்லாத காரணத்தினால் பொருட்கள் வாங்க மக்கள் வேறுபகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதி்ப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ரேஷன்கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
பொதுமக்கள் அச்சம்
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் 1-வது தெரு, 2-வது தெரு, ஜீவாநகர், ரத்தினபுரம், வெங்கடஜலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பெருகி வரும் நாய்களினால் குழந்தைகளை வெளியில் விட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
ஆக்கிரமிப்பு
மதுரை, மகால்வடம்போக்கித் தெரு, பத்துத்தூண் சந்து, விளக்குக்தூண் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்பு நிறைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.