'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் செல்கிறது. இந்த கழிவுநீரானது சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நெடுஞ்செழியன், ராமநாதபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் மெயின் ரோட்டில் வன்னியம்பட்டி விலக்கு பிரிவு சாலை விரிவுபடுத்தி பல மாதங்கள் ஆகியும் ஒளிரும் விளக்குகள் மற்றும் வழிகாட்டும் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை இயக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பெருமாள், விருதுநகர்.

ஒளிராத தெருவிளக்கு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி கிராமத்தில் உள்ள தெருவிளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி சாலை இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாமல் உள்ள தெருவிளக்குகளை மாற்றி புதிய ெதருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

ரமேஷ், கத்தாளம்பட்டி.

பஸ் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் செட்டிய கோட்டை கிராமத்திற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

குணசேகரன், ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் நேரு பஜாரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.


Related Tags :
Next Story