'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் வசதி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து நாடாமங்கலம், உதராப்புளி வழியாக சிவகங்கை செல்லும் பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கையில் இருந்து கருமத்தக்குடி வழியாக வேளாரேந்தல் செல்லும் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தப்பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
சாம்சன், மானாமதுரை.
விபத்து அபாயம்
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ஊராட்சி ஆசாரிமார் தெருவில் உள்ள வாருகால் சேதமடைந்து பெரும் பள்ளத்துடன் சாலை நடுவே காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சேதமடைந்த பள்ளத்தில் தவறி விழுகிறார்கள். இதனால் இப்பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அதிகாரிகள் சேதமடைந்த வாருகாலை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜமால், தாயில்பட்டி.
அடிக்கடி மின்தடை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் ஊராட்சியில் உள்ள 1-வது டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்வினியோகம் பெறும் வீடுகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையால் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். இரவுநேரங்களில் ஏற்படும் மின்நிறுத்தத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து மின்தடையை நிறுத்த வேண்டும்.
போஸ், தாயமங்கலம்.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நெய்மாணிக்கம் வடக்கு யாதவர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்காக குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இ்ங்கு குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. 2 ஆழ்துளை கிணறுகள் இருந்தும் தண்ணீர் கிடையாது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று வருகிறார்கள். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
ராஜம்மாள், முதுகுளத்தூர்.
சேதமடைந்த நிழற்குடை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை இடிந்தநிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வெளியூருக்கு செல்லும் பயணிகள் நிற்க இடமில்லாமல் தவிக்கிறார்கள். மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், ஆலங்குளம்.