'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சேதமடைந்த மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைகுளம் ஊராட்சி புளியங்குளம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகின்றது. மின்கம்பத்தின் கம்பிகள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பத்தினால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

முத்து, இலந்தைகுளம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கல்லாராதினிப்பட்டி, கீழப்பூங்குடி ஆகிய கிராமங்களின் வழியே இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இப்பகுதி மக்கள் நீண்டநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட அளவில் இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, சிவகங்கை.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய கொல்லபட்டி வழியாக இருக்கன்குடி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பிரதானமிக்க இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. எனவே அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகிம், விருதுநகர்.

சாலையோரம் ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை கிராமத்தில் சாலையோரம் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சாலை குறுகலாக இருப்பதனால் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் அவசர தேவைக்கு ஆப்புலன்ஸ் போன்ற வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான ேபாக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதாகர், வாடிப்பட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் தளிர்மருங்கூர் ஊராட்சி தெற்கு பகுதி முதல் பாகனவயல் கிராமம் வழியாக டி.புதுக்குளம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

சாய்வினோத், தளிர்மருங்கூர்.

புதிய பாலம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தர்மாசனம்பட்டி கிராமத்தில் உள்ள பாலத்தின் மேற்பரப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலம் தரைமட்டமாக காணப்படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துவிடுகின்றது. மேலும் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீர் சேமிக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்கவும், கண்மாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம், தர்மாசனம்பட்டி.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாய்கள் துரத்துவதால் பலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய்கடியால் தினமும் சிலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ேமலும், வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்கின்றது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், சிவகங்கை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர்-1 வது தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. தேங்கும் கழிவுநீரால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, மதுரை.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்லும் வழியாக உள்ள வன்னியம்பட்டி விலக்கு பல கிராம மக்களின் முக்கிய பஸ் நிறுத்தமாக உள்ளது. இந்த பஸ் நிறத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியோர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பதால் அவர்களின் உடல்திறன் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர்.

பொதுமக்கள் சிரமம்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு என தனியாக ரேஷன் கடை இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கீழகைலாசபுரம்.


Related Tags :
Next Story