தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலையானது தென்தமிழகத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் அதிக அளவில் தடுப்புகள் (பேரிகார்டு) அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த தடுப்பில் மோதி தினமும் விபத்தில் சிக்கி வருகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள பேரிகார்டுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார், திருமங்கலம்.
விரைந்து முடிக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின்ரோட்டில் கடந்த சில மாதங்களாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய வாருகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகள் மந்தநிலையில் நடைபெறுகிறது. வாருகால் அமைக்க அப்பகுதி சாலையை தோண்டிய நிலையில் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், சிறு, சிறு விபத்துகளும் அந்த சாலையில் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் நடந்துவரும் மேம்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அர்ஜூன், சாத்தூர்.
தடுமாறும் வாகனங்கள்
மதுரை மாவட்டம் ஆனையூர்-கூடல் நகர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட சாலையானது இன்னும் சீரமைக்கப்படாமல் அரைகுறையாக இருக்கிறது. இதனால் இதில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே அதிகாரிகள் தோண்டிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பரத்வாஜ், கூடல் நகர்.
ஊருணி தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பொத்தமரத்து ஊருணி, சின்னக்குளம் கண்மாய் மற்றும் பெரியகுளம் கண்மாய் ஆகியவை உள்ளன. இந்த கண்மாய் நீரை இப்பகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊருணிகளானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய் ஓரம் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளது. கண்மாய் நீரில் ஆகாயதாமரைகள் நிரம்பி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த கண்மாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சாம்சன், சிவகாசி.