'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் வழியில் பூச்சிக்காடு பிரிவு எனும் குமாரபுரத்தில் வேகத்தடை உயரமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதாக குஞ்சன்விளையை சேர்ந்த விஜயலிங்கம் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் வேகத்தடையின் உயரத்தை குறைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

குடிநீர் குழாயில் உடைப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சாக்கடை ஓடைக்கு கீழ் குடிநீர் குழாய் செல்கிறது. அந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும், குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வரும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- மாரியம்மாள், வீரவநல்லூர்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் கிழக்கு தெருவின் வடக்குப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இங்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் இல்லை. மேலும், வடிகால் வசதியும் இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே இங்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- மணிகண்டன், கடம்பன்குளம்.

பாதியில் விடப்பட்ட கழிவுநீர் கால்வாய்

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று கிராமம் காந்தி தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. மேலத்தெருவில் இருந்து ஓடை வரை கட்டப்பட வேண்டிய இந்த கால்வாய் பாதியில் விடப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் முழுவதும் அங்குள்ள வயல்வெளிகளில் செல்கிறது. மழைக்காலத்தில் மண்ணும் சரிந்து விடுகிறது. ஆகையால், கழிவுநீர் கால்வாயை முழுமையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- தேன்மொழி, கோவிலூற்று.

மோசமான சாலை

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியில் இருந்து பொட்டல்புதூர் செல்லும் வழியில் திருமலையப்பபுரம் வளைவில் சாலை மோசமாக உள்ளது. இதேபோல் பொட்டல்புதூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

சிவகிரி 1-வது வார்டு பவுண்டு தொழு தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதில் இருந்து சுமார் ஒரு மாதம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றாமல் காட்சிப்ெபாருளாக உள்ளது. எனவே, அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- கருப்பையா, சிவகிரி.

துணை சுகாதார நிலையம் கட்டப்படுமா?

திப்பணம்பட்டி ஊராட்சி சென்னல்தாபுதுக்குளத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் கட்டிடத்தில் நீர்கசிவு ஏற்படுவதால், பணியாளர்கள் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பணியாற்றுகிறார்கள். ஆகையால் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- தங்கம் தென்னரசு, சென்னல்தாபுதுக்குளம்.

சாய்ந்த மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இருந்து மேலபுதுக்குடி செல்லும் வழியில் திருமலர்புரம் உள்ளது. இ்ங்கு மிகவும் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த மின்கம்பம் கீழே விழாமல் இருக்க முட்டுக்கொடுத்து வைத்து உள்ளனர். அந்த வழியாக தினமும் விவசாயிகள் சென்று வருகின்றனர். எனவே, ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- மும்மூர்த்தி, நாலுமாவடி.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ராஜாஜி பூங்கா முதல் நாடார் மேல்நிலைப்பள்ளி வரை இடதுபுறம் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story