'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் மேல பஸ் நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை பள்ளம் தோண்டி சீரமைத்தனர். பின்னர் அந்த பள்ளத்தை சரியாக மூடாததால் அங்கு 3 அடி உயரத்திற்கு மண்ணை குவித்து அதில் முள்செடியை வைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக கடையத்தை சேர்ந்த திருக்குமரன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக மண் குவியல் சமதளப்படுத்தப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
கால்வாய் வசதி வேண்டும்
நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் முதலாவது தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, அங்கு கால்வாய் வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
விஜய் பிரகாஷ், பாளையங்கோட்டை.
சாலை அமைக்கப்படுமா?
திசையன்விளை தாலுகா முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து ஆயன்குளம் ரசூல் நகர் பிரதான தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
நோய் பரவும் அபாயம்
ஆவரைகுளம் பயணிகள் நிழற்கூடம் அருகே உள்ள கழிப்பறை முறையாக பராமரிக்காமல் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு பஸ் ஏற வரும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். இந்த கழிப்பறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
முத்துக்குமார், ஆவரைகுளம்.
ஆபத்தான பள்ளம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் 6-வது வார்டு சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு முக்கு பகுதியில் சாைலயோரத்தில் கழிவுநீர் கால்வாய் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் மின்கம்பமும் நடப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் மின்கம்பத்தை அரித்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த கழிவுநீர் கால்வாய் பள்ளத்தை மூடவும், மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கவுசிக் ராஜ், பாலஅருணாசலபுரம்.
மின்கம்பியில் தொங்கும் கற்கள்
தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் பின்புறம் உள்ள சாலையில் மின்சார கம்பியில் மின்வாரிய ஊழியர்கள் கல்லை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இதனால் அந்த கல் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து மின்வாரியத்திற்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரெக்ஸ், தூத்துக்குடி.
கழிப்பறை சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி அந்தோணியார்புரம் மறவன்மடம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட சவேரியார் ஆலயம் அருகே உள்ள கழிப்பறை மிகவும் மோசமாக காணப்படுகிறது. கதவுகள் உடைந்தும், கட்டிடங்கள் பழுதடைந்தும் கிடக்கிறது. இந்த கழிப்பறையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.
சேதம் அடைந்த இரும்பு கம்பிகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே காடுவெட்டி பஞ்சாயத்து நளன்குடி கிராமம் பாசன கால்வாய் பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்து கிடக்கிறது. மேலும், கால்வாயின் படிகளும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், கால்வாயில் குளிக்க ெசல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மழை காலம் தொடங்குவதற்கு முன் இந்த இரும்பு தடுப்பு கம்பிகளையும், படித்துறைகளையும் பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டுகிறேன்.
சித்திரை வேல், ஸ்ரீவைகுண்டம்.
சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம்
கோவில்பட்டி புதுகிராமம் வள்ளுவர் நகர் முச்சந்தி பகுதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் வாழ்வு பதிக்கப்பட்டு, காங்கிரீட் கொண்டு மூடப்பட்டு இருந்தது. அதில் வாகனங்கள் ஏறிச்சென்றதால், காங்கிரீட் உடைந்து பள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமானவர்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். எனவே, ஏதாவது விபரீதம் ஏற்படுத்துவதற்கு முன் இந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.