'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை நகருக்குள் செல்லும் வழியில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என்று ராமன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கால்வாயை தூர்வார வேண்டும்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வாய்க்கால் பாலம் பகுதியில் பிரதான பாசன கால்வாயில் மண்மேடுகள் நிறைந்துள்ளன. எனவே மழைக்காலத்துக்கு முன்பாக, கால்வாயில் மண்மேடுகளை அகற்றி தூர்வார வேண்டும். அங்கு சேதமடைந்த படித்துறைகளையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். -ஆறுமுகநயினார், விக்கிரமசிங்கபுரம்.
வலுவிழந்த மின்கம்பம்
நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கரையிருப்பு வடக்கு தெருவில் ஆர்.சி. ஆலயம் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து வலுவிழந்துள்ளது. இதனால் அதன் அடிப்பகுதியில் மண்ணை குவித்து உயர்த்தி அமைத்துள்ளனர். எனவே அங்கு சேதமடைந்த இரும்பு மின்கம்பத்துக்கு பதிலாக புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.-முகேஷ், கரையிருப்பு.
தெருநாய்கள் தொல்லை
சேரன்மாதேவி தாலுகா கூனியூர் அக்ரஹாரம் தெருவுக்கு செல்லும் வழியில் கீழ தெரு, மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்பவர்களை தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -மணி, கூனியூர்.
சுகாதாரக்கேடு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் பாறையடி தெருவில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா? -பிரகாஷ், மருதம்புத்தூர்.
ஆபத்தான மரம்
தென்காசி அருகே நயினாகரம்- சிவராம்பேட்டை இடையில் வள்ளியம்மாள்புரம் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தென்னை மரம் மிகவும் வளைந்து சாலையில் விழும் வகையில் உள்ளது. போக்குவரத்து மிகுந்த மதுரை- கொல்லம் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எனவே ஆபத்தான தென்னை மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.-சரத்குமார், வள்ளியம்மாள்புரம்.
திறந்து கிடக்கும் வாறுகால்
தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் வாகன காப்பகம் முன்பாக சர்வீஸ் ரோட்டில் உள்ள வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாறுகால் திறந்து கிடப்பதால், அவற்றில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.-முருகன், தூத்துக்குடி.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிபட்டி நடுத்தெருவில் டி.டி.டி.ஏ. பள்ளி அருகில் உள்ள வாறுகால் பாலம் சேதமடைந்து பெரிய துவாரம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் வாறுகாலில் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்த துவாரத்தின் மீது வாழைகளை வெட்டி போட்டு வைத்துள்ளனர். எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைக்க வேண்டும்.-விநாயகம், கூசாலிபட்டி.
சாய்ந்த மின்கம்பம்
ஆழ்வார்திருநகரி அருகே அழகியமணவாளபுரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் தொடக்கப்பள்ளி, பள்ளிவாசல் போன்றவை அமைந்துள்ளன. பலத்த காற்று, மழையின்போது மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -மகதும் இர்பான், ஆழ்வார்திருநகரி.
சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கதர் காலனி தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?-ஆனந்தராஜ், செந்தியம்பலம்.