'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சேதம் அடைந்த மின்கம்பம்
பழனி அண்ணாநகர் திருவள்ளுவர் குறுக்குதெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துவிட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த கம்பிகளும் துருப்பிடித்து காணப்படுவதால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும். -மாரிமுத்து, பழனி.
பஸ்களின் நேர அட்டவணை
வேடசந்தூர் வழியாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பல பஸ்கள், வேடசந்தூர் பஸ் நிலையத்துக்குள் வராமல் ஆத்துமேடு வழியாக சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் ஆத்துமேடு பகுதிக்கு சென்று பயணிகள் பஸ்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. அதோடு பஸ்கள் வரும் நேரமும் தெரிவதில்லை. எனவே அனைத்து பஸ்களும், வேடசந்தூர் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையம், ஆத்துமேடு பகுதியில் பஸ்களின் நேர அட்டவணை வைக்க வேண்டும். -லட்சுமிபதி, வேடசந்தூர்.
சேறும், சகதியுமான சாலை
கன்னிவாடியில் இருந்து ரெட்டியார்சத்திரம் செல்லும் சாலையில் 4 இடங்களில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பக்கவாட்டில் சாலை அமைத்து தரவேண்டும். அவ்வாறு சாலை எதுவும் அமைத்து தராததால் மண் பாதையின் வழியாக தார்சாலைக்கு வாகனங்கள் செல்கின்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மண் பாதை சேறும், சகதியுமாக மாறியது. அதன் வழியாக வாகனங்கள் தார்சாலைக்கு செல்வதால் தார்சாலையும் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே பாலம் கட்டும் இடங்களில் பக்கவாட்டு சாலை அமைக்க வேண்டும். -லட்சுமணன், கன்னிவாடி.
போக்குவரத்து சிக்னல் தேவை
பழனி ரெணகாளியம்மன் கோவில் சந்திப்பில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. அரசு, தனியார் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டு கொண்டு முந்தி செல்வதால் சிறு, சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே அந்த சந்திப்பு பகுதியில் வாகன போக்குவரத்தை சரிசெய்ய சிக்னல் அமைக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தேனி புதிய பஸ்நிலையம் அருகே குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. மேலும் குழாய் உடைப்பை சரிசெய்வதற்கு தோண்டப்பட்ட பள்ளமும் அப்படியே கிடக்கிறது. அந்த பள்ளத்தில் குளம்போல் குடிநீர் தேங்கி நிற்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். -செல்வேந்திரன், தேனி.