தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
முள்மரங்களால் இடையூறு
அம்மாபாளையம்-கண்ணமங்கலம் செல்லும் சாலையில் முள்மரங்கள் வளர்ந்து சாலை வரை நீண்டுள்ளது. அந்த வழியாக வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் ஒதுங்கும்போது முள்மரங்கள் இடையூறாக உள்ளது. வாகனங்களில் செல்லும்போது முகத்தில் முள் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது. இதை, ஊராட்சி நிர்வாகம் சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-ராஜா, அம்மாபாளையம்.
நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கப்படுமா?
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆலங்காயத்தில் இருந்து நான்கு வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டன. அதற்காக பெரிய விழாவே நடத்தப்பட்டது. அதில் கலெக்டர், 4 எம்.எல்.ஏ.க்கள், வேலூர் போக்குவரத்துக்கழக மண்டல ெபாது மேலாளர், ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் பணிமனை மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அந்த 4 பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டு விட்டன. நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.ஜெயபால், ஆலங்காயம்.
ஆடுகளை கடித்துக்குதறும் நாய்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா குைகயநெல்லூர் ஊராட்சி மேல்மாந்தாங்கல் கிராமத்தில் நாய்கள் அதிகமாக உள்ளன. அந்த நாய்கள் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை வெறித்தனமாக கடித்துக்குதறி கொன்று விடுகின்றன. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெரியசாமி, குகையநெல்லூர்.
உயர் மின் கோபுர விளக்கு எரியுமா?
திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட முத்து விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி ஆணையர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் மின் கோபுரம் விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இந்தப் பகுதி இரவிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உயர் மின் கோபுர விளக்கை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
-அண்ணாமலை, திருவண்ணாமலை.
நகரும் படிக்கட்டு, மின் தூக்கி வசதி தேவை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் தோல் மற்றும் தோல் பொருள் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. தோல் பொருள் வர்த்தகம் தொடர்பாக பலர் ரெயில்கள் மூலம் ஆம்பூருக்கு வருகிறார்கள். உள்ளூர் மக்கள் பலர் வெளியூருக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார்கள். ரெயில் நிலைய 2, 3-வது நடைமேடைக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதி செய்யப்படவில்ைல. இரும்பு நடைமேடை பாலம் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதியை செய்து தர வேண்டும்.
-கலீல்நிஷார்அகமத், எம்.வி.குப்பம்.
மின் விளக்கு, இருக்கை வசதி செய்யப்படுமா?
திருவண்ணாமலை நகரில் பெரியார் சிலை பஸ் நிறுத்த நிழற்குடையில் பயணிகளுக்கு இருக்கை வசதிகள் இல்லை. இரவில் மின்சார வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு வசதி, இருக்கைகள் வசதி செய்து தருவார்களா?
-முத்துமாணிக்கம், திருவண்ணாமலை.
கால்வாயில் குப்பைகளை அகற்ற வேண்டும்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகமாக தேங்கி உள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர், நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு என இரு இடங்களில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் அங்குள்ள மரக்கிளைகள் மீது உரசியபடி உள்ளது. அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்த ேவண்டும். வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேபிள் டி.வி. வயர்கள் உயர் அழுத்த மின்கம்பிகளில் உரசியவாறு செல்கிறது. அதை அகற்ற வேண்டும். மின் கம்பங்களில் கேபிள் டி.வி. வயர்களை கட்டுவதால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. எனவே அதை, தவிர்க்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், அரக்கோணம்.