தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய பள்ளி கட்டிடம் வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் ஆதிதிராவிட ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி தற்போது சேதம் அடைந்துள்ளது. அந்தப் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.நித்தியானந்தம், காரை.
சாலையை சீர் செய்வார்களா?
திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கூட்ரோடு புதிதாகப் போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை மோசமாக உள்ளதால் பல விபத்துகள் நடக்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அதை வாகனங்கள் கடக்கும் போது மற்றவா் மேல் தண்ணீர் பீய்ச்சியடிக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலையை சீர் செய்வார்களா?
-மோகன் திருப்பத்தூர்.
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை 5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. தார் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் நடந்து செல்வோரின் கால்களை பதம்பார்க்கும் வகையில் உள்ளது. சைக்கிள்கள், மோட்டார்சைக்கிள்கள், நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். அந்தச் சாலையை சரி செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்குமா?
-சு.ஷன்மதி. சென்னாவரம்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையொட்டி உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் ெஜ.பி.சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒவ்வொரு வார்டாக பணிகளை மேற்கொள்ளாமல் ஒட்டு மொத்த வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்துச் சாலைகளையும் ஒரே நேரத்தில் பெயர்த்துப்போட்டு பணிகளை மெத்தன போக்கில் செய்து வருகிறார்கள். இதனால் வயது முதிர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனே சீரமைத்துத் தர ேவண்டும்.
-பார்த்திபன், வேலூர்.
தெருக்களில் தார்சாலை அமைக்கப்படுமா?
வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள தெருக்களில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் மழைநீர் அப்பகுதியில் தேங்கிக் காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்தைவெளி பகுதியில் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
சூதாட்டத்தை தடுக்க ேவண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பல்வேறு இடங்களில் 1 நம்பர் லாட்டரி விற்பனை, 3 சீட்டு சூதாட்டம் நடந்து வருகிறது. மேலும் கந்துவட்டி வசூலும் அதிகமாகி விட்டது. எனவே 1 நம்பர் லாட்டரி, 3 சீட்டு மற்றும் சூதாட்டத்தை நடத்தும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-வெங்கட்ரமணா, ஆற்காடு.
'தினத்தந்தி'க்கு நன்றி
வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் மாணவிகள் விடுதி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதனை சுத்தம் செய்யவேண்டும் என தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக அதிகாரிகளின் நடவடிக்கையின் பேரில் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-மாயவன், வேலூர்.