'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை குமாரகிரி பஞ்சாயத்து ராஜீவ்நகரில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாகவும், ராமன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைத்து, மின்கம்பிகளை உயர்த்தி அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மோட்டார் அறை

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பெருமாள்நகரில் மோட்டார் அறையின் மீது சின்டெக்ஸ் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மோட்டார் அறையின் அடித்தளம் சேதமடைந்து வலுவிழந்து உள்ளதால், எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மோட்டார் அறையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மாரிமுத்து, பெருமாள்நகர்.

வாறுகால் தூர்வாரப்படுமா?

நெல்லை டவுன் 28-வது வார்டு மாணிக்கவாசகர் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகாலை தூர்வாருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-ராஜ், நெல்லை டவுன்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

வள்ளியூர் யூனியன் தெற்கு கருங்குளம் பஞ்சாயத்து சங்கனாபுரத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டுகின்றனர். பின்னர் அவற்றுக்கு தீ வைத்து எரிப்பதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், அருகில் உள்ள மரங்களும் கருகி சேதமடைகின்றன. அப்பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிகளும் பயன்பாடற்று கவிழ்ந்து கிடக்கின்றன. எனவே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சுப்பையா, சங்கனாபுரம்.

குப்பை கிடங்காக மாறிய கிணறு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தின் நடுவில் உள்ள பொதுக்கிணற்றை முன்பு பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தினர். நாளடைவில் பயன்பாடற்ற அந்த கிணற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அதன் அருகில் உள்ள தெருக்குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். இதனால் கிணற்றில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை தூர்வாரி மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதுடன், இரும்பு கம்பியாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-செல்லத்துரை, வீரிருப்பு.

தெருவிளக்கு தேவை

ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜீவா, ஓடைமறிச்சான்.

வேகத்தடை அவசியம்

திருவேங்கடத்தில் இருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. அந்த பகுதியில் வேகத்தடைகள் இல்லாததால், வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.

எலும்புக்கூடான மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையை அடுத்த கார்த்திகைபட்டி கிழக்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-கண்ணன், கார்த்திகைபட்டி.

பயன்பாடற்ற கண்காணிப்பு கேமரா

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை சத்திரம் பயணிகள் நிழற்கூடையின் மீது கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமரா சேதமடைந்து தரையை பார்த்து தொங்கியவாறு உள்ளது. எனவே பயன்பாடற்ற கண்காணிப்பு கேமராவை புதுப்பித்து நேராக அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-நிர்மல், கூட்டாம்புளி.


Next Story