'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சேதமடைந்த தடுப்புச்சுவர்
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் இருந்து கும்மம்பட்டிக்கு செல்லும் சாலையில் குடகனாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பாலத்தை அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
பழனி இட்டேரி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-அறிவாசன், மானூர்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. எனவே பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-அழகு ஈஸ்வரன், ஒட்டன்சத்திரம்.
பாதாள சாக்கடை பணியால் சாலை சேதம்
தேனி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில், பாதாள சாக்கடை பராமரிப்பு பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் சாலை சேதமடைந்து மேடுபள்ளமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வரலட்சுமி, தேனி.