'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்

நிலக்கோட்டை தாலுகா குல்லலக்குண்டு அருகே சாண்டலர்புரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிட சுவரையொட்டி மரமும் வளர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிச்செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய்குமார், குல்லலக்குண்டு.

சேதமடைந்த மின்கம்பம்

வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சி 15 வார்டு பகுதியான கொன்னம்பட்டி மண்டுகோவில் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்துள்ளன. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரிதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

பயணிகளை அச்சுறுத்தும் பஸ்கள்

பழனி பஸ் நிலையத்துக்குள் வரும் சில தனியார் பஸ்கள் அதிவேகமாக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் வருகின்றன. மேலும் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் வழித்தடத்தில் இந்த பஸ்கள் உள்ளே வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் அதிவேகமாக பஸ்களை ஓட்டி வருபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுப்பிரமணியன், பழனி.

மதுபான பாராக மாறிய பாலூட்டும் அறை

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பல மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. சிலர் இதனை இரவு நேர மதுபான பாராக பயன்படுத்துகின்றனர். எனவே பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், தேனி.


Next Story