தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள்.

கன்னியாகுமரி

சேதமடைந்த விளையாட்டு உபகரணம்

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தபத்மநாபபுரத்தில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் முன்பு குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, சேதமடைந்த நிலையில் உள்ளன. இங்கு விளையாடும் குழந்தைகள் மீது விளையாட்டு உபகரணங்கள் விழுந்து பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குழந்தைகளின் நலன்கருதி விளையாட்டு உபகரணங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.தர்மராஜன், அனந்தபத்மநாபபுரம்.

தடுப்பு வேலி வேண்டும்

ராஜாக்கமங்கலம்-ஈத்தாமொழி மேற்கு கடற்கரை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அந்த பகுதியில் ஏற்கனவே இருந்தது போல் தடுப்பு வேலிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ. நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

ஆபத்தான மரக்கிளை

தாழக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு பெரிய அரச மரம் நிற்கிறது. இந்த மரத்தின் கிளைகள் அருகில் உள்ள சாலையின் மேல் பகுதியில் மின்கம்பிகள் மீது சாய்வாக வளைந்து நிற்கிறது. தற்போது அந்த மரக்கிளைகள் சேதமடைந்து காற்றில் முறிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் நிற்கும் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.எஸ். சிதம்பரதாணு, தாழக்குடி.

பஸ் வசதி தேவை

குலசேகரத்தில் இருந்து ராஜாவூரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். இவர்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் இரண்டு அல்லது மூன்று பஸ்கள் ஏறி செல்கிறார்கள். இதனால், அவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, பக்தர்கள் நலன்கருதி தினமும் மாலையில் குலசேகரத்தில் இருந்து தடிக்காரன்கோணம், திட்டுவிளை, நாகர்கோவில், சுசீந்திரம், தோப்பூர், நல்லூர், மருங்கூர் வழியாக ராஜாவூருக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வி.பென்சிகர், குலசேகரம்.

ஆபத்தான நிழற்குடை

நாகர்கோவில் மாநகராட்சியில் இருளப்புரம் சந்திப்பில் ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். இந்த நிழற்குடையின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, ேபராபத்து ஏற்படும் முன்பு பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

வழிகாட்டும் பலகை வேண்டும்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் புலியூர்குறிச்சி பகுதி உள்ளது. இங்கிருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஒரு சாலை செல்கிறது. மேலும், இந்த பகுதியில் உதயகிரி கோட்டை போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் அடையாளம் காணும் வகையில் இங்கு வழிகாட்டும் பலகை இல்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் வகையில் புலியூர்குறிச்சி பகுதியில் வழிகாட்டும் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.எஸ். மகேந்திரன், ஓணப்பாறை.

பால் கிடைக்க நடவடிக்கை தேவை

தக்கலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான வெந்நீர், பால் போன்றவை வாங்குவதற்காக உறவினர்கள் மருத்துவமனையின் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டியது உள்ளது. இவ்வாறு சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் இயங்கவில்லை. எனவே, மருத்துவமனை வளாகத்தில் வெந்நீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் பாலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.சுபின், தக்கலை.


Next Story