'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சசிக்குமார், திண்டுக்கல்.
வாகன நிறுத்துமிடமாகிய பேரூராட்சி அலுவலகம்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனம் நிறுத்துமிடமாக பேரூராட்சி அலுவலகம் மாறி வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பாண்டியராஜன், ஆண்டிப்பட்டி.
சேதமடைந்த சாலை
கொடைக்காலை அடுத்த பூம்பாறையில் இருந்து புதூர் செல்லும் சாலை சேதமடைந்து காட்சியளிக்கிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பரவி கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்லிராஜா, பூம்பாறை.
சாக்கடை கால்வாய் பாலம் சேதம்
நிலக்கோட்டை ஒன்றியம் பொம்மணம்பட்டியை அடுத்த சி.புதூரில் சாலையின் குறுக்காக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளது. வாகனங்களில் வருபவர்கள் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.