'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அள்ளப்படாத குப்பைகள்
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ராமநாதன்நகரில் குப்பைகள் கொட்டுவதற்காக சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள் சரிவர அள்ளிச்செல்லப்படுவதில்லை. இதனால் குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிவதுடன், சாலையோரத்தில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-அய்யப்பன், பழனி.
சாக்கடை கால்வாய் வேண்டும்
திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக சாலையின் லயன் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கி, திண்டுக்கல்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
போடி 16-வது வார்டு பெருமாள் கோவில் தெரு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த தெருவில் சைக்கிள், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஸ்ரீவெங்கட், போடி.
சாக்கடை கால்வாய் பாலம் சேதம்
பெரியகுளத்தை அடுத்த ஊஞ்சாம்பட்டி ரத்தினம் நகர் 9-வது தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்து உள்ளது. பாலத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரா, தேனி.
தெருநாய்கள் தொல்லை
நிலக்கோட்டை தாலுகா கோட்டை கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதுடன், அவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகுபாண்டியம்மாள், நிலக்கோட்டை.
சேதமடைந்த மேல்நிலை தொட்டி
நத்தம் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து வருகிறது. மேலும் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள்.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் இருந்து ரெட்டியபட்டிக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாக், தோட்டனூத்து.
------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
----------------------