'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

போக்குவரத்துக்கு இடையூறு

பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் ஸ்டேட் வங்கி காலனி பிரிவு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நேதாஜி, பெரியகுளம்.

குப்பைகளால் மாசடையும் நிலத்தடிநீர்

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள கல்குவாரி குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கிறது. மேலும் குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. எனவே கல்குவாரி பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-அபராஜிதன், உத்தமபாளையம்.

மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?

நிலக்கோட்டை நால்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாரல் மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மழைநீர் வழிந்தோடி செல்லும் வகையில் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் (படம்)

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புஸ்பவனம் கிழக்கு சவேரியார்பாளையம் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயில் தேங்குவதுடன், வீடுகளில் உள்ள கழிப்பறை குழாய்களுக்குள்ளும் புகுந்துவிடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ஜெயராம், புஷ்பவனம்.

மண்பாதையாக மாறும் சாலை

உத்தமபாளையத்தில், கம்பம் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் பாதையாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், உத்தமபாளையம்.

தரைப்பாலம் சேதம்

திண்டுக்கல் சந்தைப்பேட்டை சேலாங்கண்ணி தெருவில் சாலையின் குறுக்காக செல்லும் சாக்கடை கால்வாயின் மேல் அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரவில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், திண்டுக்கல்.

ஊருணி தூர்வாரப்படுமா?

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தலாபுரம் கிழக்கு தெருவில் அங்கன்வாடி மையம் அருகே ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் குப்பை, கழிவுகள் சேர்ந்து அசுத்தமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஊருணியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

-அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

குழாய் உடைவதால் வீணாகும் குடிநீர்

சின்னமனூரில், உத்தமபாளையம் செல்லும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனை தடுக்க வாய்க்கால் போன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை மூடுவதுடன், குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, சின்னமனூர்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story