'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 July 2022 9:51 PM IST (Updated: 26 July 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சேதம் அடைந்த மின்கம்பம்

நிலக்கோட்டை தாலுகா கொக்குப்பட்டி முதல் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காட்சி அளிக்கிறது. மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் முன்பு அதை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை நடவேண்டும். -அய்யர்பாண்டி, விளாம்பட்டி.

தொற்று நோய் பரவும் அபாயம்

ஆண்டிப்பட்டி பேரூராட்சி பாலாஜிநகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பிரதான சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக மக்கள் செல்ல முடியவில்லை. மேலும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பாலசுப்பிரமணியன், ஆண்டிப்பட்டி.

குப்பை மேடான சாலை

நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் சாலை குப்பை மேடமாக மாறி வருகிறது. மாணவர்கள் உள்பட அனைவரும் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் குப்பைகளை யாரும் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

மின்கம்பம் மாற்றப்படுமா?

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், சேதம் அடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். -காளிதாஸ், கோணப்பட்டி.

பஸ்கள் நிற்காததால் மக்கள் அவதி

தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், வங்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை உள்ளன. ஆனால் கோட்டூர் வழியாக செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ்கள் நின்று செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? -விவேக், கோட்டூர்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

திண்டுக்கல் பிஸ்மிநகரில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. கால்வாய்களில் குப்பைகள், மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். -அப்பாஸ்அலி, பிஸ்மிநகர்.

வீடுகளுக்கு மேல் செல்லும் மின்கம்பிகள்

நிலக்கோட்டை தாலுகா நடுப்பட்டியில் வீடுகளின் மேற்கூரைக்கு மேலாக மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் பலத்த காற்று, மழையின் போது மக்கள் அச்சத்துடன் வீடுகளில் வாழும் நிலை உள்ளது. எனவே மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். -முருகபெருமாள், நடுப்பட்டி.

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

ஆண்டிப்பட்டி தாலுகா ஜக்கம்பட்டி எஸ்.வி.எஸ்.நகரில் சாக்கடை கால்வாய் அருகே குடிநீர் குழாய் இருக்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து விடும் அபாயம் உள்ளது. அதன்மூலம் நோய்கள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகரன், ஆண்டிப்பட்டி.

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை

தேனி புதிய பஸ் நிலையத்தில் ஒருசில கடைகளில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், தேனி.

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

திண்டுக்கல் ரவுண்டுரோடு அருகே உள்ள கருணாநிதி காலனியில் பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது. அதை மூட முடியாத அளவுக்கு சேதம் அடைந்து விட்டதால், தென்னை ஓலை மற்றும் குச்சிகளை பள்ளத்தில் அடையாளத்துக்கு நட்டு வைத்துள்ளனர். நடுத்தெருவில் பாதாள சாக்கடை திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், கருணாநிதிகாலனி.

பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுமா?

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி மலைக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். தற்போது மலைப்பாதை சீரமைக்கப்பட்டு விட்டதால், பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்களை சேர்க்க வேண்டும். -பொதுமக்கள், முதுவார்குடி.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story