'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குருக்களையன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். வாகனங்களின் டயர்களை கற்கள் பதம் பார்த்து விடுகின்றன. எனவே சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும். -முகமதுஅப்துல்லா, தொட்டணம்பட்டி.
அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
திண்டுக்கல் அருகே அரசனம்பட்டி குமாரபாளையம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அந்த பஸ்சை இயக்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அரசு பஸ்சை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், குமாரபாளையம்.
குடியிருப்பு பகுதியில் குப்பைகள்
பெரியகுளம் ஒன்றியம் எண்டபுளி ஊராட்சி இ.புதுக்கோட்டை அண்ணாநகரில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. அவை மழையில் நனைந்து துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் மக்கள் வசிக்க முடியவில்லை. மேலும் சாலை, சாக்கடை வசதியும் முழுமையாக இல்லை. அண்ணாநகரில் அடிப்படை வசதிகள் செய்து தருவதோடு, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். -சூரியபிரகாஷ், இ.புதுக்கோட்டை.
சேதம் அடைந்த நாடகமேடை
ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி அண்ணாநகரில் உள்ள நாடகமேடை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த நாடகமேடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெங்கசாமி, அண்ணாநகர்.
குடிநீர் திருட்டு
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி 2-வது வார்டு பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் திருடப்படுகிறது. இதனால் மோட்டார் பயன்படுத்தாத இணைப்புகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. எனவே மோட்டார் வைத்து குடிநீர் திருடுவதை தடுக்க வேண்டும். -வீரமணி, சீலப்பாடி.
புதர் மண்டிய கழிப்பறை
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே போடேந்திரபுரத்தில் பொது கழிப்பறையை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால் விஷப்பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொது கழிப்பறையை சுற்றிலும் உள்ள செடிகளை அகற்ற வேண்டும். -பொதுமக்கள், போடேந்திரபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே ஒத்தக்கடையில் இருந்து செங்கோட்டைபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும். -ராஜா, எரியோடு.
புதிதாக சாலை அமைக்க வேண்டும்
தேனி மாவட்டம் வருசநாடு-வாலிப்பாறை இடையே உள்ள 9 கி.மீ. தூர சாலையில் 3 கி.மீ. தூரம் சேதம் அடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியவில்லை. எனவே 3 கி.மீ. தூரம் புதிதாக சாலை அமைக்க வேண்டும். -சதீஷ், வருசநாடு.
அரசு பஸ் இயக்க வேண்டும்
தேவாரத்தில் இருந்து மதுரைக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த 2 வாரங்களாக இயக்கப்படவில்லை. இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -யாழரசு பாண்டின், தேவாரம்.
சாக்கடை கால்வாயில் உடைப்பு
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பிரிவு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், தாமரைக்குளம்.
-------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.