'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்
கம்பம் 10-வது வார்டு சுப்பிரமணிய கோவில் தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களை துரத்திச்செல்கின்றன. இதனால் வீடுகளைவிட்டு வெளியே வரவே பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, கம்பம்.
பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம்
பழனியை அடுத்த மானூர் அருகே சண்முகநதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து தடுப்புச்சுவரில் கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் தடுப்புச்சுவர் இடிந்து விழும் நிலை உள்ளது. அப்படி விழுந்தால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், மானூர்.
கழிப்பறை வசதி வேண்டும்
உத்தமபாளையம் தாலுகா எரசக்கநாயக்கனூர் இந்திரா காலனியில் கழிப்பறை வசதி செய்யப்படவில்லை. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கழிப்பறை இல்லாததால் அப்பகுதி பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோதியன், இந்திராகாலனி.
சாலை அமைக்க வேண்டும்
பாலகிருஷ்ணாபுரம் 3-வது ரெயில்வே கேட்டை அடுத்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சாலை வசதி செய்யப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. தற்போது தொடர்மழை பெய்து வருவதால் அந்த பாதை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தெருவாசிகள், பாலகிருஷ்ணாபுரம்.
தெருவில் தேங்கும் மழைநீர்
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக போடி கிருஷ்ணாநகர் தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகன ஒட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், போடி.
குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்
திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியில் பெரியசெட்டிக்குளம், சின்னசெட்டிக்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையால் இந்த குளங்கள் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகோபால், அனுமந்தநகர்.
தெருநாய்கள் தொல்லை
வத்தலக்குண்டு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.
-பாக்கியராஜ், வத்தலக்குண்டு.
வடிகால் வசதி செய்யப்படுமா?
கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலக சாலை மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி, சிமெண்டு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் மழை பெய்யும் சமயங்களில் சாலை சகதி காடாக மாறிவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அப்பகுதிகளில் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கவும், வடிகால் வசதியை ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், மயிலாடும்பாறை.
---------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.