'தினத்தந்தி' புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் அருகே பிளீஸ்புரம் தெருவில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாலை மோசமாக இருப்பதால் அந்த வழியாக இரவில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-சந்தோஷ், வத்தலக்குண்டு.
குப்பை கொட்டும் இடமான மைதானம்
நிலக்கோட்டை தாலுகா குரும்பபட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் கொடப்படுவதால் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனால் மைதானம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மைதானத்துக்கு வருபவர்கள் முகம் சுழித்தபடியே மைதானத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.
-ரமேஷ், குரும்பபட்டி.
சாலையின் நடுவே பள்ளம்
வேடசந்தூர் தாலுகா அலுவலக சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த பள்ளம் மூடப்படவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வாகனங்களில் வருபவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்பிரியன், வேடசந்தூர்.
ஆரம்ப சுகாதார நிலையம் தேவை
பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே செங்கட்டாம்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
-ராஜா, செங்கட்டாம்பட்டி.
பஸ்நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள்
சாணார்பட்டி அருகே கொசவப்பட்டியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்காக செல்பவர்கள் ஆகியோர் கொசவப்பட்டி பஸ் நிறுத்தத்தில் காலை நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி செல்லும் அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலானவை கொசவப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்கள் கொசவப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-அந்தோணி, கொசவப்பட்டி.
தார்சாலை அமைக்க வேண்டும்
சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மண் பாதை அப்பகுதியில் பெய்த மழை கார ணமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு தார்சாலை அமைக்க வேண்டும்.
-மகேந்திரன், சீப்பாலக்கோட்டை.
வாகன ஓட்டிகள் அச்சம்
கடமலைக்குண்டுவை அடுத்த துரைச்சாமிபுரம் விலக்கில் இருந்து வருசநாடு செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவி லென்ஸ் (எதிரே வரும் வாகனங்களை காட்டும் கண்ணாடி) வைக்கப்பட்டுள்ளது. இந்த குவி லென்சுகள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த குவி லென்சுகளை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், கடமலைக்குண்டு.
முல்லைப்பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர்
உத்தமபாளையம் பகுதியில் உள்ள சாக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. எனவே முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திப்புசுல்தான், உத்தமபாளையம்.
அடிப்படை வசதிகள் தேவை
உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சி 9-வது வார்டு வள்ளுவர் தெருவில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
-கணேஷ்குமார், பண்ணைப்புரம்.
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
உத்தமபாளையத்தை அடுத்த உ.அம்மாபட்டியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-ராமர், உ.அம்மாபட்டி.
----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.