'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
ஆண்டிப்பட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டி-திம்மரசநாயக்கனூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் மண்ணை போட்டு மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
-சென்றாயபெருமாள், சக்கம்பட்டி.
வங்கி கிளை அமைக்கப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் வங்கி கிளைகள் எதுவும் செயல்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊரில் தான் செயல்படுகிறது. இதனால் ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள், வியாபாரிகள் வங்கி சேவைக்காக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வக்கம்பட்டியில் வங்கி கிளை அமைக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
முறையாக சாலை அமைக்க வேண்டும்
தேனியை அடுத்த கூடலூரில் நான்கு வழிச்சாலை உறுதித்தன்மை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அந்த சாலை சேதமடைந்துவிடும். எனவே தார்சாலையை முறையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, கூடலூர்.
பாதையை மீட்டு தர வேண்டும்
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அன்னை சத்யா காலனி பகுதியில் உள்ள பாதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் தனியார் கட்டிட சுவர் உள்ளது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையை மீட்டு தர வேண்டும்.
-மணி, வில்பட்டி.
அடிப்படை வசதிகள் வேண்டும்
பெரியகுளம் எ.புதுக்கோட்டை அருளானந்தபுரம் நகரில் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் வசதியில்லை. அதோடு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இலக்கியா, எ.புதுக்கோட்டை.
சாக்கடை கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜன், சக்கம்பட்டி.
பள்ளத்தால் விபத்து அபாயம்
திண்டுக்கல் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், திண்டுக்கல்.
உலர்களமாக மாறிய சாலை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையக்கோட்டை, மார்க்கம்பட்டியில் உள்ள சாலைகளில் மக்காச்சோளத்தை காய வைக்கின்றனர். இதனால் அந்த சாலைகள் உலர்களமாக மாறியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை உலர்களமாக பயன்படுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-ராஜன், இடையக்கோட்டை.
தொற்று நோய் பரவும் அபாயம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வழிந்தோட கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் உருவாவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரியப்பன், சென்னஞ்செட்டிபட்டி.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.