'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 May 2023 12:45 AM IST (Updated: 15 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

இடையக்கோட்டையில் இருந்து நாரப்பநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனி வழியாக சின்னக்கம்பட்டிக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த மாதம் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் திடீரென சாலை பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலைப்பணியை விரைவாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், இடையக்கோட்டை.

கம்பி வேலி அமைக்கப்படுமா?

தேனி பாரஸ்ட் ரோடு குடியிருப்பு பகுதியில் உள்ள வால்கரடு வனப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இரவில் சிலர் கஞ்சா, மதுவுடன் அங்கு வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த பகுதியில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அத்துடன் வனப்பகுதியில் ஆட்கள் நுழையாமல் தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும்.

-மக்கள் செல்வம், தேனி.

மின்விளக்கு வசதி வேண்டும்

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தேனி-கம்பம் சாலையில் முத்துதேவன்பட்டியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வரை சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கு வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

-இளம்பரிதி, தேனி.

சேதமடைந்து வரும் மின்கம்பம்

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி குமர கோனார் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

பழனி-திண்டுக்கல் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-சண்முகப்பிரியா, பழனி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

சேதமடைந்து வரும் சாலை

சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் இருந்து ம.மூ.கோவிலூருக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வயதானவர்களும் நடந்து செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஊர் மக்கள், புகையிலைப்பட்டி.

புதர்மண்டி காட்சியளிக்கும் தெரு

போடி மேலச்சொக்கநாதபுரம் 8-வது வார்டில் உள்ள தெருவில் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த தெருவில் முக்கால்வாசி பகுதி புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், மேலச்சொக்கநாதபுரம்.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

கம்பம் நகராட்சி 33-வது வார்டு ஆங்கூர்பாளையம் ரோட்டில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, கம்பம்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

--------------


Related Tags :
Next Story