'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

வீணாகும் குடிநீர்

கோபியில் ஈரோடு, சத்தியமங்கலம், குன்னத்தூர் ஆகிய 3 ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பாதசாரிகள் மீது தண்ணீர் படுகிறது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பாதியில் நிற்கும் பணி

கோபியில் இருந்து பச்சைமலை செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப் பட்டுவிட்டது. குழியில் இருந்து மண் அள்ளப்பட்டு ரோட்டில் போடப்பட்டு உள்ளது. இதனால் ரோடு குறுகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த மின் கம்பம்

மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி செங்கோடகவுடண்புதூர் வழியாக கொளாநல்லி நீரேற்று நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பத்தின் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈஞ்சம்பள்ளி.

குடிநீர் குழாயில் உடைப்பு

ஈரோடு காவிரி ரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் குடிநீர் குழாய் பல மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதன்காரணமாக அந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன. மேலும் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், ஈரோடு.

மின்ஒயர்கள் பழுது

கோபி ராமர் எக்ஸ்டென்சன் 2-வது வீதியில் மின் கம்பம் உள்ளது. இதிலுள்ள மின்ஒயர்கள் பழுதடைந்து உள்ளது. இதனால் காற்று அடிக்கும்போது மின்ஒயர்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பழுதான மின்ஒயர்களை சரிசெய்து பேராபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், கோபி

பழுதடைந்த ரோடு

ஈரோடு கே.என்.கே. ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மூலப்பட்டறையில் இருந்து பவானி செல்லும் ரோட்டுக்கு திரும்பும் பகுதியிலும் ரோடு மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லதா, கருங்கல்பாளையம்

------------------


Related Tags :
Next Story