'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நேரத்தை மாற்ற வேண்டும்
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக முதியோர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் அதிகாலை நேரத்தில் எழுந்து குடிநீர் பிடிக்க சிரமப்படுகிறார்கள். அதிகாலை 5 மணிக்கு மேல் வினியோகம் செய்தால் அனைவரும் குடிநீர் பிடிக்க முடியும். எனவே குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
சாக்கடை தூர்வாரப்படுமா?
ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் உள்ள ஆவின் பால் கடை அருகில் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடையில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் செல்ல முடியாதபடி உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பெரியவலசு.
தொலைத்தொடர்பு வசதி தேவை
பர்கூர் மலைப்பகுதி மேற்கு மலைப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் செல்போன் சேவைகள் முறையாக கிைடப்பதில்லை. இங்குள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும், வனவிலங்குகள் தாக்கி காயம் அடைந்தாலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முடியாமல் மலைவாழ் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி பர்கூர் மலைப்பகுதியில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பர்கூர்.
ஆபத்தான குழி
ஈரோடு செங்கோடம்பள்ளம் விஜி கார்டனில் சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டினார்கள். ஆனால் அதை அப்படியே மூடாமல் விட்டு விட்டார்கள். இதனால் இந்த குழிக்குள் பலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே ஆபத்தான இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செந்தில், ஈரோடு.
ரோட்டில் கழிவு நீ்ர்
ஈரோடு நல்லியம்பாளையத்தில் ரோட்டு ஓரத்தில் சாக்கடை நீர் ஆறுபோல் செல்கிறது. இதனால் ரோட்டில் செல்லமுடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.
வேல், ஈரோடு.
பாலம் திறக்கப்படுமா?
அவல்பூந்துறையில் இருந்து பண்ணைக்கிணறு செல்லும் சாலையில் லிங்காத்தாகுட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இந்த சிறிய பாலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்கின்றன. இதனால் எரிபொருள் செலவு அதிகமாகிறது. எனவே பணி முடிந்த பாலங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், லிங்காத்தாகுட்டை.
பாதியில் சாலைப்பணி
கவுந்தப்பாடியில் இருந்து கோபி செல்லும் ரோட்டில் எல்.எம்.பாலப்பாளையம் உள்ளது. அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் சாலைப்பணி இதுவரை முடியவில்லை. இதனால் எங்கள் ஊருக்கு செல்லும் முக்கிய பாதைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கியாஸ், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வண்டிகள் கூட வர முடியவில்லை. பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்ல ஆட்டோ மற்றும் பள்ளிக்கூட வாகனங்களும் வர முடியவில்லை. எனவே இங்குள்ள பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
பொதுமக்கள், எல்.எம்.பாலப்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி மேட்டுவலவு பகுதியில் குப்பனன் வீதி உள்ளது. அந்த வீதியின் ஒரு இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
நிழற்குடை தேவை
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் நால்ரோடு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சில் ஏறி ஈரோடு, வெள்ளக்கோவில், சிவகிரி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். ஆனால் பயணிகள் காத்திருப்பதற்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகளின் நலன் கருதி லக்காபுரம் நால்ரோடு பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், லக்காபுரம்.