'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

பாழடைந்த கிணறு

கல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டியூர் கிராமத்தில் பாழடைந்த ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஆடு, மாடு, கோழிகள் ஏற்கனவே தவறி விழுந்து உயிரிழந்துள்ளன. மேலும் தற்போது அந்த கிணற்றில் பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த கிணற்றை ஊராட்சி நிர்வாகம் உடனே மூட வேண்டும். அல்லது தடுப்பு சுவர் கட்டவேண்டும்.

பொதுமக்கள், கல்பாவி.

ஆபத்தான மின்கம்பம்

கெம்பநாயக்கன் பாளையம் கூட்டுறவு வங்கியின் அருகில் ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. கம்பத்தின் மேல் பகுதியில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின்கம்பத்தை அகற்றி வேறு மின்கம்பம் நடவேண்டும்.

பொதுமக்கள், கெம்பநாயக்கன் பாளையம்.

நிழற்குடையை மீட்பார்களா?

நம்பியூா் அருகே உள்ள குருமந்தூர் ரோட்டில், ஆயிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெயிலில் நிற்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை மீட்பார்களா?

செல்வம், நம்பியூா்.

போக்குவரத்துக்கு இடையூறு

அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குதிரைகள் எப்போதும் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குதிரைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல ஆவன செய்ய வேண்டும்.

அருள், அந்தியூர்.

பள்ளிக்கூடம் முன்பு கற்கள்

அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் முன்பு கற்கள் போடப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் வரும் மாணவ-மாணவிகள் சற்று கவன குறைவாக நடந்து வந்தாலும் கற்களில் பட்டு காயம் ஏற்பட்டு விடும். சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகளும் தடுமாறுகிறார்கள். எனவே பள்ளிக்கூடம் முன்பு உள்ள கல்லை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும்.

சந்திரன், அந்தியூர்.

மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?

ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள தெருவில் மழை பெய்யும்போது குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் அரை மணிநேரம் மழை பெய்தாலே 3 மணிநேரத்துக்கு தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும். இதனால் அந்த வழியாக செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கு மழைநீர் வடிகால் வசதி அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்பிரபு, நாடார் மேடு, ஈரோடு


Related Tags :
Next Story