தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

தள்ளாட வைக்கும் சாலை

ஈரோடு வெண்டிபாளையத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை ஜல்லிகள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் தள்ளாடி தள்ளாடி செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?

பொதுமக்கள், வெண்டிபாளையம்

தேங்கி நிற்கும் மழைநீர்

மொடக்குறிச்சி அருகே உள்ள முகாசி அனுமன் பள்ளி ஊராட்சி சென்னிபாளியில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா?

கணேஷ், சென்னிப்பாளி

குறுகலான ரோடு

அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சத்தி மெயின்ரோடு குறுகலாக உள்ளது. இதனால் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்லும்போது இடையூறு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்

மழைநீர் வடிகால் அமைக்கப்படுமா?

ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள தெருவில் மழை பெய்யும்போது குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் அரை மணிநேரம் மழை பெய்தாலே 3 மணி நேரத்துக்கு தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும். இதனால் அந்த வழியாக செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கு மழைநீர் வடிகால் வசதி அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்பிரபு, நாடார் மேடு, ஈரோடு

வடிகால் வசதி வேண்டும்

அந்தியூரை அடுத்த நகலூர் அருகே உள்ள குண்டுபுளியமரம் என்ற இடத்தில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்ல சிரமமாக உள்ளது. உடனே சாக்கடை வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், குண்டுப்புளியமரம்.

மரக்கிளைகளுக்குள் மின்கம்பி

டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் தொடக்கப்பள்ளி அருகே மின்கம்பி மரக்கிளைகளில் படுத்தபடி செல்கிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சம்பந்தப்பட்ட மரங்களுக்கு அடியிலும் பொதுமக்கள் நின்று செல்கிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை ஆபத்தில்லாத வகையில் மாற்றி அமைப்பார்களா?

பொதுமக்கள், கொண்டையம்பாளையம்.

பயணிகள் அவதி

ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் உள்ள நுழைவு பாலத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஈரோடு சோலார், பூந்துறைரோட்டில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர் வழியாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கரூர், வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு வரும் சில தனியார் பஸ்கள் சோலாரில் இருந்து கொல்லம்பாளையம், நாடார்மேடு வழியாக செல்லாமல் வெண்டிபாளையம், பழைய கரூர்ரோடு வழியாக காளைமாட்டு சிலைக்கு செல்கிறது. இதனால் நாடார்மேடு, கொல்லம்பாளையத்துக்கு செல்ல வேண்டிய பயணிகளை சோலாரிலேயே தனியார் பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் இறக்கி விடுவதால் அவதி அடைகிறார்கள். எனவே வழக்கமாக கொல்லம்பாளையம், நாடார்மேடு வழியாக தனியார் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், ஈரோடு.

பாலம் அமைக்க வேண்டும்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையில் கட்டப்பட்ட சிறிய பாலம் சிதிலமடைந்துவிட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு நீரோடையை கடந்து செல்கிறார்கள். எனவே உள்ளாட்சி நிர்வாகத்தினர் புதுப்பாளையம் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும்.

சந்திரன், அந்தியூர்


Related Tags :
Next Story