தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

ஆபத்தான மின் கம்பம்

அந்தியூரில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த மின் கம்பத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்தும், செடிகள் படர்ந்தும் காணப்படுகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடைபெறும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

சுகாதாரக்கேடு

அந்தியூர் சிவசக்தி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைகள் குவிக்கப்பட்டு கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

பொங்கியண்ணன், அந்தியூர்.

குவிந்து கிடக்கும் குப்பை

ஈரோடு பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி குப்பை கொட்டப்பட்டு உள்ளது. குப்பையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவித்ரா, ஈரோடு.

புதர் அகற்றப்படுமா?

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு அலுவலகம் மற்றும் 3 குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த அலுவலக பகுதியில் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிக அளவில் வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு வருபவர்கள் ஒருவித அச்சத்தில் வரவேண்டி உள்ளது. எனவே அலுவலகத்தில் சுற்றி உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், அம்மாபேட்டை.

வெளிச்சம் தராத மின்விளக்கு

கோபி நகராட்சி மேட்டுவலவு பஸ் நிறுத்தம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு கடந்த சில ஆண்டுகளாக எரியவில்லை. மேலும் இந்த பகுதி 6 ரோடுகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வெளிச்சம் தராத உயர் கோபுர மின் விளக்கை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

விரைந்து முடிக்கப்படுமா?

நம்பியூரில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் தீயணைப்பு நிலையம் எதிரே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்னர் குழி தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நம்பியூர்.

உடைந்த சுவர்

கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனையின் பின்புற சுவர் உடைந்து காணப்படுகிறது. அந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

வீணாகும் குடிநீர்

ஈரோடு மாநகராட்சி நல்லியம்பாளையம் ஸ்ரீராகவேந்திரா நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. பின்னர் அங்கு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் விட்டு விட்டார்கள். இதனால் ஸ்ரீராகவேந்திரா நகர் பிரிவு பகுதியில் சில மாதங்களாகவே குடிநீர் தார் ரோட்டில் ஊற்றுபோல வீணாகிக்கொண்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், ஸ்ரீராகவேந்திரா நகர்.


Related Tags :
Next Story