'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை வசதி
சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் அருகே உள்ள குப்பந்துறை புதுக்காலனியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும்போது வீடு மற்றும் வீதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வீதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓதியப்பன், குப்பந்துறை
சீரமைக்கப்படுமா?
நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மண் சாலை மோசமாக காணப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருந்தேவன்பாளையம்.
வடிகால் வேண்டும்
கோபி சாய் சுப்பிரமணிய நகரில் உள்ள ஒரு வீதியில் கழிவு நீர் செல்ல கால்வாய், சாக்கடை வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதிக்கு சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
மதுபிரியர்களால் தொல்லை
ஈரோடு சம்பத் நகர் அண்ணா தியேட்டர் ரோட்டில் குடிமகன்கள் அரைகுரை ஆடையுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையிலேேய படுத்துக்கொள்கிறார்கள். மேலும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் அந்த இடத்தை கடந்து செல்வதற்கே அஞ்சுகிறார்கள். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை ஒதுக்குப்புறமாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, ஈரோடு.
வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்நிலையம் நோக்கி செல்லும் ரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டுக்கு முன்பாக பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் ரோடு மிகவும் மோசமாக, குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த இடத்தில் விழுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இனியாவது அங்கு ரோட்டை சீரமைப்பார்களா?
மலரவன், ஈரோடு.
மேம்பாலம் அமைக்க வேண்டும்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் கெட்டி சமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. ஏரி நிரம்பும் காலங்களில் அதிக அளவு உபரி நீர் சாலையில் ெவளியேறுகிறது. இதனால் அங்கு சாலை பழுதாவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே அங்குள்ள மக்களின் வசதிக்காக அந்த இடத்தில் மேம்பாலம் கட்டித்தர ஆவன செய்வார்களா?
அருள், புதுப்பாளையம்.
பழுதடைந்த சாலை
அந்தியூர் அருகே உள்ள பெருமாபாளையம் வனசின்னப்பர் கோவில் பகுதியில் தார்சாலை மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது அந்த ரோட்டில் நடந்து செல்லக்கூட சிரமமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனசின்னப்பர் கோவில் பகுதியில் ரோட்டை சீரமைப்பார்களா?
சந்திரன், அந்தியூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
கோபி பச்சை மலையில் இருந்து கரட்டூர் நோக்கி செல்லும் ரோட்டில் அடிக்கடி குப்பைகள் கொட்டப்படுகின்றன, இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கோபி நகராட்சி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன். கோபி