'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

ஆபத்தான குழி

கோபி அக்ரஹாரம் கிருஷ்ணன் வீதியில் இருந்து காட்டு கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோட்டின் முகப்பில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. மேலும் அந்த குழிக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

நாய்கள் தொல்லை

அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. நடுரோட்டில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆப்பக்கூடல்

வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலத்தில் உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செண்பகபுதூர் பவர் ஹவுஸ் மூலக்கிணறு பிரியும் சாலையில் கேபிள் பதிப்பதற்காக ரோட்டின் குறுக்கே குழி பறித்தார்கள். அதன்பின்னர் அதை சரி செய்யவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேபிள் குழியை சரி செய்வார்களா?

மூர்த்தி. செண்பகப்புதூர்.

பாதையில் வழியும் கழிவுநீர்

எலவமலை ஊராட்சி பெரியார் நகர் மணல் ஆபீஸ் வீதியில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு போடுவதற்காக ஜல்லிகள் கொண்டு வந்து போட்டார்கள். ஆனால் அதன்பின்னர் எந்த பணியும் நடை பெறவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மக்கள் நடந்து செல்லும் பாதையிலேயே வழிந்தோடுகிறது. இதன்காரணமாக கொசுத்தொல்லையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை, ரோடு போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரியார் நகர், எலவமலை.

பாலம் அமைக்க வேண்டும்

அந்தியூர் அருகே உள்ள மலைக்கிராமம் காக்காயனூர். இங்குள்ளவர்கள் ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடத்துக்கு போக அங்குள்ள காட்டாற்றை தாண்டி செல்ல வேண்டும். மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் மழைக்காலங்களில் ரேஷன் கடை மற்றும் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்களும், பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகளும் செல்ல முடியவில்லை. எனவே காக்காயனூர் காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன், அந்தியூர்.

ஓடையில் செடி-கொடிகள்

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் கல்லறை தோட்டம் அருகே கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் செடி-கொடிகள் ஆக்கிரமித்து விட்டதால் கழிவுநீர் செல்வதற்கு தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கீரிப்பள்ளம் ஓடையில் இருக்கும் செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி

பாலத்தின் கீழே பள்ளம்

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் கீழே உள்ள ரோட்டில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பெரிய பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டன. மேலும் அருகே உள்ள கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் இந்த ரோட்டில் வழிந்தோடுகிறது. அதனால் ரோடு மிகவும் மோசமடைந்துவிட்டது. அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் கீழே உள்ள ரோட்டை உடனே பராமரிக்க வேண்டும்.

நாசர், ஈரோடு


Related Tags :
Next Story