'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்
ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியில் பழுதான டிரான்ஸ்பார்மர் இருப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு. பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும்.
நந்தகுமார், ஆப்பக்கூடல்.
ரோட்டில் ஓடும் கழிவுநீர்
பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தம்பாளையம் புதூர் என்ற ஊரில் சாக்கடை கழிவுநீ்ர் ரோட்டில் ஓடி வருகிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆழ்துளை கிணற்றிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. உடனே கந்தம்பாளையம்புதூரில் சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கந்தம்பாளையம்புதூர்
கொசு தொல்லை
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பிரிவு 3-ல் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் கொசு தொல்லை காரணமாக இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்பட்டு உள்ளன. எனவே கொசு தொல்லையை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஞ்சீவ்குமார். ஈரோடு.
கழிவுநீர் அகற்றப்படுமா?
கோபி நகராட்சிக்கு உள்பட்ட சாய்பாபா சுப்பிரமணியம் நகரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்குள்ள பொதுமக்களின் நலன் கருதி தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
.
வடிகால் வேண்டும்
பெருந்துறை கூனம்பட்டி பிரிவு தனியார் கல்லூரி ரோட்டில் லட்சுமி நகரில் கழிவுநீர் வடிகால் முறையாக இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி உள்ளதுடன், கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்றவை பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே வடிகாலை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருந்துறை.
சீரமைக்கப்படுமா?
ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி. நகர் மாரியம்மன் கோவில் தெருவில் 4 ரோடுகள் சந்திப்பு வருகிறது. இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது. இதன்காரணமாக தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலு, ஈ.பி.பி. நகர்.