'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
ஈரோட்டில் பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக நாச்சியப்பா வீதி, வாசுகி வீதி, அகில்மேடு வீதிகளில் ஏராளமான நாய்கள் காணப்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நாய்கள் துரத்துவதால் அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். நடந்து செல்பவர்களையும் நாய்கள் கடிக்க ஓடி வருகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் சுற்றும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகார்த்திகேயன், ஈரோடு.
சீரழிந்து கிடக்கும் சிறுவர் பூங்கா
கோபி வாஸ்து நகருக்கு செல்லும் ரோட்டில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் செடிகள் முறையாக வெட்டப்படாமல் உள்ளது. மேலும் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறுவர் பூங்காவில் புற்களை முறையாக வெட்டவும், விளையாட்டு உபகரணங்களை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாதன், கோபி.
உடைந்த தொட்டி மூடி
கோபி மாதேசியப்பன் வீதியில் கிழக்கே வாசுமனை பிரிவு ரோடு செல்கிறது. அந்த ரோட்டின் முகப்பின் தரையில் உள்ள குடிநீர் தொட்டியின் மூடி சிலாப்புகள் உடைந்துள்ளன. இதை உடனே சரிசெய்யாவிட்டால் சிலாப்பு முழுவதும் உடைந்துவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்ய ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், கோபி.
சீரமைக்க வேண்டும்
கோபி பஸ் நிலையம் பைபாஸ் பாலம் அருகே ரோட்டில் குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி மூடப்பட்டது. ஆனால் குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் பாத சாரிகள் தவறி கீழே விழுந்து உள்ளனர். எனவே அந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பயன்பாட்டுக்கு வேண்டும்
கோபி அரசு மருத்துவமனை எதிரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆழ்குழாய் கிணறு செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் இதை பயன்படுத்தவில்லை. இந்த ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குதிரைகளால் இடையூறு
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் மைதானத்தை சுற்றி திரிகின்றன. இதனால் மைதானத்தில் விளையாடும் மாணவர்களுக்கும், காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் மிகவும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் குதிரைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டு ரோட்டில் ஓடி வருவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி தெருநாய்கள் ரோட்டில் வருவோர், செல்வோரை கடித்து விடுகின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் குதிரை மற்றும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், அந்தியூர்