'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்துள்ள குப்பைகள்
கோபி-பாரியூர் ரோட்டில் அரசு பள்ளிக்கூடம் அருகே கரட்டூர் செல்லும் ரோடு உள்ளது. அந்த ரோட்டின் இரு பக்கமும் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. காற்றடித்தால் குப்பை துகள்கள் பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டின் இருபுறமும் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
விஸ்வம், கோபி
சீரமைக்க வேண்டும்
அந்தியூர் கீழ்வானி கிராமம் அருகே உள்ள சென்னிமலை கவுண்டன் புதூர் மேற்குத்தெருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் சேதமடைந்தது. மேலும் சாக்கடை கால்வாயோடு இணைந்துள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்லவும் அச்சமாக உள்ளது. உடனே சேதமடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், மின்கம்பத்தை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவா, சென்னிமலைகவுண்டன்புதூர்
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி கிராமம் அமர்ஜோதி கார்டனில் உள்ள சாக்கடை வடிகாலில் மண் கொட்டப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே வடிகாலில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
ரவி, அளுக்குளி
கொசுக்கள் தொல்லை
கோபிசெட்டிபாளையம் பா.நஞ்சக்கவுண்டன்பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள மாதேஸ்வரா நகரின் நுழைவு பகுதியின் எதிரில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் நோய் பரவ வாய்ப்புள்ளது. சாக்கடை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?
ராஜ.சக்தி தேவேந்திரகுமார், பா.நஞ்சகவுண்டன்பாளையம்
குவியலாக கற்கள்
அந்தியூர் பர்கூர் ரோட்டில் வெள்ளித்திருப்பூர் பிரிவு பகுதியில் கற்கள் குவியலாக கிடக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உடனே அந்த கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், அந்தியூர்
விபத்து அபாயம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தன டிப்போ ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையின் மேல் பகுதி ரோட்டின் உயரத்தை விட சற்று தாழ்ந்து குழி போல் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் மோதி தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உடனே ரோட்டின் உயரத்துக்கு ஏற்றார்போல் பாதாள சாக்கடையின் மேல் பகுதியை மாற்றி அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டு்ம்.
எம்.சுரேஷ் பிரபுதாஸ், சத்தியமங்கலம்.
ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்
கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் ஏரி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
எம்.பாலசுப்பிரமணியம், பி.மேட்டுப்பாளையம்.
குடிநீர் இணைப்பு
பெருந்துறை பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆ.அர்ஜுனன், முத்துநகர்