'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாய்ந்த சிக்னல் கம்பம்
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனை அருகே போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் தானியங்கி சிக்னல் கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில் ஏதோ ஒரு வாகனம் மோதியதில் அது சாய்ந்துவிட்டது. எனினும் அது சாய்ந்தபடி இயங்கி கொண்டிருந்தாலும், வாகன ஓட்டிகளுக்கு அது சரியாக தெரியவில்லை. எனவே போக்குவரத்து சிக்னல் கம்பத்தை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
சத்தியமங்கலம் நகராட்சி 25-வது வார்டில் பரிசல் துறை வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள மரக்கிளைகள் உரசுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஜா மைதீன், சத்தியமங்கலம்.
குண்டும், குழியுமான ரோடு
சித்தோட்டில் இருந்து பெருந்துறைக்கு செல்லும் ரோடுகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. மேலும் வாகனங்களில் பயணிக்கும் இருக்கைகளில் உட்கார முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சித்தோடு.
ஆபத்தான பள்ளம்
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதியில் பஸ்கள் திரும்பும் இடத்தில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாந்தி, ஈரோடு.
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
அந்தியூரில் இருந்து நகலூருக்கு வருவதற்கு ரோடு ஒன்று உள்ளது. இந்த ரோட்டில் தெருவிளக்குள் அமைக்கப்படவில்லை. இதனால் ரோடு இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும் அந்த ரோட்டில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் அந்த ரோட்டில் வர அச்சப்படுகிறார்கள். எனவே அந்தியூர்- நகலூர் ரோட்டில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், நகலூர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
ஈரோடு பவானி மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக குடிநீர் வெளியேறி வீணாக ரோட்டில் செல்கிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது சேறு கலந்த நீர் வாகனங்களின் சக்கரங்களில் பட்டு தெறித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், ஈரோடு.
பாராட்டு
கோபி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வங்கி முன்பு மூடப்படாத தொட்டி இருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த தொட்டியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூடி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.