'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழாயில் உடைப்பு
ஈரோடு நகரின் அடையாளமான பன்னீர் செல்வம் பூங்காவின் பின்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 4 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த இடத்தில் பல கேபிள்களும் கிடக்கின்றன. அவைகளும் தண்ணீரில் நனைந்து வீணாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை உடனே சீரமைக்க வேண்டும்.
சிவக்குமார், ஈரோடு.
புகையால் அவதி
ஈரோடு சோலார் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஈரோடு-கரூர் ரோட்டின் ஓரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த குப்பைகளுக்கு தீயும் வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு குப்பை கொட்டுவதையும், அதற்கு தீவைப்பதையும் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
புதா் மண்டிய ரவுண்டானா
நம்பியூா் குருமந்தூா்மேடு ரவுண்டானா புதா் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் ஊர்ந்து வெளியே வருகின்றன. வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்பவா்களும் இதனால் அச்சம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரவுண்டானாைவ சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நம்பியூர்.
குப்பையும், குழியும்
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் டீச்சர்ஸ் காலனி பஸ் ஸ்டாப் நேர் எதிரில் உள்ள வீதியில் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதேபோல் இங்குள்ள தெருவிளக்குகளும் ஒளிர்வதில்லை. மேலும் இந்த ரோட்டில் ஒரு பெரிய குழி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், தெருவிளக்குகள் ஒளிரவும், குழியை மூடவும் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஈரோடு.
குடியிருப்பை சுற்றி பாம்புகள்
கோபி கலிங்கியம் காந்திநகர் 4-வது வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சுற்றி புதர் ஆக்கிரமித்துள்ளது. இந்த புதர்களில் இருந்து அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் வந்து விடுகின்றன. இதனால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் காந்திநகரில் உள்ள புதர்களை சுத்தம் செய்வார்களா?
பொதுமக்கள், காந்திநகர்.
பாராட்டு
ஈரோடு எல்லை மேட்டில் உள்ள முத்துநகர் பகுதியில் சென்னிமலை ரோட்டில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் இருந்தது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் ஏறி, இறங்கி தடுமாறி விழுந்தார்கள். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச ஆவன செய்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் முத்துநகர் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம்.
அர்ஜூனன், முத்து நகர்.