தினத்தந்தி' செய்தி எதிரொலி : மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட எம்.எல்.ஏ. நடவடிக்கை
தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மழவராயநத்தம் சுடுகாட்டிற்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
தென்திருப்பேரை:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மழராயநத்தம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு குளத்தின் மீது பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
தினத்தந்தி செய்தி
ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட மழவராயநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்தவர் இறந்தால் அருகில் உள்ள குளத்தின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு உடலை குளத்து தண்ணீரில் நீந்தி சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண, குளத்தில் பாலம் அமைத்து தரவேண்டும் என மழவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கடந்த 16-ந்தேதி 'தினத்தந்தி'யில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இக்கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
எம்.எல்.ஏ. உறுதி
இதை தொடர்ந்து இக்கிராமத்திற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ெசன்றார். சுடுகாட்டு பகுதியை அவர் ஆய்வு செய்தார். அந்த கிராம மக்களிடம் குறைகேட்ட அவர், உடனடியாக சுடுகாட்டுக்கு செல்ல குளத்தில் பாலம் அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். பின்னர் இந்த குளத்தில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், சிவராஜ் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆழ்வார்திருநகரி
இதை தொடர்ந்து ஆழ்வார்திருநகரியில் நடந்த புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடதிறப்பு விழாவில் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பேசினார். பின்னர் ஆழ்வார்திருநகரி யூனியன் கடையனோடை பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஏரல் தாசில்தார் கண்ணன், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவராஜ் ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்து தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாழவல்லான்
இதேபோன்று ஏரல் அருகே உள்ள வாழவல்லான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், செயலாளர் வேம்புதுரை, ஸ்ரீவைகுண்டம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், ஆன்றோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி, பஞ்சாயத்து தலைவர் கனி, துணைத் தலைவர் ஜெயக்குமாரி கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.