தினத்தந்தி செய்தி எதிரொலியாக செய்துங்கநல்லூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி
தினத்தந்தி செய்தி எதிரொலியாக செய்துங்கநல்லூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தினத்தந்தி நாளிதழ் செய்தி எதிரொலியாக சேதமடைந்த சாலையில் நேற்று சீரமைப்பு பணி நடந்தது.
சாலைப்பணி
செய்துங்கநல்லூர் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் கருங்குளத்தில் இருந்து தெற்கு காரசேரி காட்டுப்பகுதி வரை கடந்த ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது. அதே போல் சேரகுளத்தில் இருந்து வள்ளுவர் காலனி வரையும் மேம்படுத்தும் பணி நடந்தது. ஆனால் இதற்கிடையில் உள்ள 5 கிலோ மீட்டர் தூரம் சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி இந்த சாலையை புதுப்பிக்கும் பணி ரூ.2.13 கோடி மதிப்பில் தொடங்கியது. ஆனால் சில நாட்களில் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது.
ஒரேநாளில் சேதம்
இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கு காரசேரி காட்டுப்பகுதியில் இருந்து வள்ளுவர்காலனி வரை சாலைப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வள்ளுவர் காலனி பகுதியில் சென்ற லாரி ஒன்று சாலையில் பக்கவாட்டில் இறங்கியது. சாலை சேதமடைந்தது. புதிதாக போடப்பட்ட ஒரேநாளில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நேற்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.
சீரமைப்பு பணி
இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறைஅதிகாரிகள் நேற்று அந்த சாலையை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று காலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மழைகாலம் தொடங்குவதால் சேதமடைந்த சாலையை மீண்டும் சேதமடையாதவாறு தரமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.