'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரசு பஸ் இயக்கப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி அருகே உள்ள அரசனம்பட்டி வழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தின் போது அந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இதுவரை அரசு பஸ்சை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், அரசனம்பட்டி.
சேதம் அடைந்த குடிநீர் தொட்டி
தேனி அல்லிநகரம் நகராட்சி 19-வது வார்டு சமதர்மபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் தொட்டி இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், தேனி.
தேங்கி நிற்கும் குடிநீர்
பழனி ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எளிதாக தண்ணீர் பிடிக்கும் வகையில் குழாயை சுற்றி தொட்டி போன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் வழிந்தோடி செல்ல வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரில் கொசுப்புழுக்கள் அதிக அளவில் உருவாகிறது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அம்சராஜ், பழனி.
நடைமேடை ஆக்கிரமிப்பு
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் நடைமேடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் சிலர் தற்காலிக கடைகள் அமைத்தும் ஆக்கிரமிக்கின்றனர். அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், திண்டுக்கல்.