தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்குகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பஸ்கள், வங்கிகள், கடைகளில் என எங்கு கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், சித்தையன்கோட்டை.
குப்பைகள் தீவைத்து எரிப்பு
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள சின்னையாபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் மொத்தமாக குவித்து தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகை அங்கன்வாடி மையம், குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுவதால் குழந்தைகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அந்த வழியாக வாகனங்களில் செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
சாலையில் தேங்கிய மழைநீர்
திண்டுக்கல் நேருஜிநகர் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. அந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. இதனால் ரவுண்டுரோடு பகுதியில் இருந்து வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
முல்லைப்பெரியாற்றில் குப்பைகள்
தேனி அருகே வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் மக்கள் வருகின்றனர். அங்கு தர்ப்பணம் செய்யும் மக்கள் குளித்துவிட்டு பழைய துணிகளை ஆற்றில் விட்டு செல்கின்றனர். மேலும் ஆற்றுக்குள் குப்பைகளும் வீசப்படுகிறது. இதனால் முல்லைப்பெரியாறு மாசடைந்து வருகிறது. எனவே ஆற்றுப்படுகையில் பக்தர்கள் பழைய துணிகள், குப்பைகளை போடுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
-மாயவன், தேனி.